முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு செல்லும் பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை
முல்லைப் பெரியாறு அணைக்கு பராமரிப்பு பொருட்களை கொண்டு செல்வதற்கு முன்பு தமிழக அரசு கேரள அரசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தால், தடை இல்லாமல் அனுமதிப்பதாக புதன்கிழமை நடந்த துணைக் குழு ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணைக்கு பராமரிப்பு பொருட்களை கொண்டு செல்வதற்கு முன்பு தமிழக அரசு கேரள அரசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தால், தடை இல்லாமல் அனுமதிப்பதாக புதன்கிழமை நடந்த துணைக் குழு ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் எல்.ஏ.வி. நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இந்த குழுவிற்கு உதவியாக அணையின் சீப்பேஜ் நீரின் அளவை கணக்கிடுவது, அணையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ் கிரீஷ் தலைமையில் ஐவர் கொண்ட துணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த ஐவர் குழுவில் தமிழகம் சார்பாக, பெரியாறு அணை செயற் பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரமும், கேரள அரசின் பிரதிநிதிகளாக பெரியாறு மைனர் இரிக்கேஷன் செயற்பொறியாளார் ஜார்ஜ் டேனியல், உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரசீத் ஆகியோரும் உள்ளனர்.
இந்த ஐவர் கொண்ட துணைக்குழு, முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். ஆய்விற்கு குழுத்தலைவர் தமிழக அரசின் பிரதிநிதிகள் தேக்கடியிலிருந்து படகில் அணைக்கு சென்றனர். கேரள அரசின் பிரதிநிதிகள் வல்லக்கடவு வனப்பகுதியிலிருந்து அணைக்கு ஜீப்பில் வந்தனர். பின்னர் ஐவர் துணைக் குழுவினர் அணையில் ஆய்வு நடத்தினர். இதி்ல், அணையின் பிரதான அணை, பேபி அணை, அணையின் சுரங்கப்பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் நீர்மட்டம், ஜீபேஸ் அளவு (அணையில் அழுத்தத்தால் ஏற்படும் நீர்கசிவு) கணக்கீடப்பட்டது. ஜீப் பேஸ் அளவு வினாடிக்கு 49 லிட்டர் இருந்தது.
பின்னர், குமுளியில் மூவர் குழு அலுவலகத்தில், மாலை ஐவர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அணைக்கு பராமரிப்பு பணிக்கு தமிழக அரசு கொண்டு செல்லும் பொருட்களை கேரள வனத்துறை தடை செய்வதாக, மூவர் குழு உத்தரவினை மதிக்காமல் செயல்படுவதாக தமிழக பிரதிநிதிகள் தெரிவித்தனர். கேரளாவின் சார்பில், தமிழக அரசு பராமரிப்புக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யவில்லை, ஆனால், வழக்கமான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதற்கு தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைக்கு பராரமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை கேரள வனத்துறை, கேரள நீர்பாசனத்துறை ஆகியவற்றிருக்கு முறையாக தகவல் தெரிவித்துவிட்டால், கேரள வனத்துறை சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படமாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பருவ மழை காலங்களில் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மூவர் குழு தலைவர் எல்.ஏ.வி. நாதனுக்கு கடிதம் அனுப்பி வைக்க உள்ளதாக துணைக் குழுவினர் தெரிவித்தனர்.