விருதுநகர் மாவட்ட பகுதிகளில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு பணி மும்முரம்
தீபாவளி திருநாளுக்கு 31 நாள்களே உள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் கம்பி மத்தாப்புகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், இப்பகுதியில் பட்டாசு விற்பனை நிலையங்களில் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
தீபாவளி திருநாளுக்கு 31 நாள்களே உள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் கம்பி மத்தாப்புகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், இப்பகுதியில் பட்டாசு விற்பனை நிலையங்களில் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
இப்பகுதியில், விவசாயத்தை அடுத்து முக்கிய தொழிலாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்கள் முதன்மைத் தொழிலாக உள்ளது. அதிலும், இந்தியாவின் பட்டாசு தொழில் நகரம் மற்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும் நகரமாக சிவகாசி உள்ளது. இத்தொழிலில் மறைமுகமாக 2.50 லட்சம் பேரும், நேரிடையாக 3 லட்சம் பேரும் குடும்பம், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் மட்டும் சிறியதும், பெரியதுமாக 865 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தீபாவளி திருநாளுக்கு 31 நாள்களே உள்ளதால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் விரும்பும் பல்வேறு ரகங்களில் பட்டாசுகளை தயார் செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
நிகழாண்டில் இளைஞர்கள் விரும்பும் புதிய வரவுகளாக சத்தத்தோடு பல வண்ணங்களில் வெடித்து சிதறும் வகையில் தயாரான ஸ்பார்க்கிள் ரூப், விசில் அடிக்கும் மினி சைரன், பூந்தொட்டி, மல்டிகலர் பூச்சட்டி, 100 முதல் 50 ஆயிரம் வரையிலான சர வெடிகள், புதிய வகைகளான ஸ்பீடு 50 சாட், பல வண்ணங்களில் 10 நிமிடங்கள் வானில் வெடித்து சிதறும் மெட்ரோ டிராவலர் போன்ற பேன்சி ரக பட்டாசுகளும், சிறியவர்களுக்கான தீப்பெட்டி மத்தாப்பு, நீண்ட நேரம் எரியும் வகையில் கம்பி, பென்சில் மத்தாப்புகள் தயார் செய்து வெளி மாநிலங்ளுக்கும், உள்ளூர் பகுதிகளில் அனுமதி பெற்ற பட்டாசுகள் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விநாயகமூர்த்தி கூறுகையில், ஆலைகளில் உற்பத்தியான பட்டாசுகள் விருதுநகர்-சாத்தூர், சாத்தூர்-சிவகாசி, சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி-விருதுநகர், விருதுநகர்-அழாகபுரி ஆகிய சாலைப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அதன் மூலம் விற்பனையும் சூடு பிடித்து வருகிறது. தற்போது, இங்கு தயார் செய்யப்படும் பட்டாசுகளுடன், சீன பட்டாசுகளையும் கலந்து விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தேங்கும் நிலையேற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து தனியார் பட்டாசு ஆலை தொழிலாளி பள்ளபட்டி பாப்பாத்தி(60) கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறேன். இதையடுத்து வேறு எந்த மாற்று வேலையும் தெரியாது. ஒவ்வொரு நாளும் வேலைக்கேற்ப ரூ.250 முதல் ரூ.350 வரையில் கூலி கிடைக்கும். இவ்வருவாய் மூலமே வீட்டு வாடகையும், பிள்ளைகளை படிக்க வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். இப்பகுதியில் கள்ளத்தனமாக சீன விற்பனை செய்யப்படுவதால், ஆலைகளில் வாரத்திற்கு 3 நாள்களே வேலை வழங்குகிறார்கள். எனவே கடந்தாண்டு வேலை செய்த நாள்களுக்கேற்ப முழு போனஸ் ரூ.20 ஆயிரம் கிடைத்த நிலையில், நிகழாண்டில் அதிக வேலைநாள்கள் இல்லாததால் போனஸ் தொகையும் குறைவாகவே கிடைக்கும் நிலையிருப்பதாக அவர் தெரிவித்தார்.