முகப்பு
தமிழ்நாடு

உலகத்தை இணைக்க இணையத்தமிழ் வளரவேண்டும்: அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ.சுப்பையா

உலகத்தை இணைக்கும் இணையத்தமிழ் வளரவேண்டும் என்ற உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள கணினித் தமிழ்ச்சங்கத்துக்கு பல்கலைக்கழகம் துணைநிற்கும் என்றார் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா.

Updated On : 12 அக்டோபர், 2015 at 7:22 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:27 PM

உலகத்தை இணைக்கும் இணையத்தமிழ் வளரவேண்டும் என்ற உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள கணினித் தமிழ்ச்சங்கத்துக்கு பல்கலைக்கழகம் துணைநிற்கும் என்றார் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா.

புதுக்கோட்டையில் உள்ள ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற “ நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா(2015)வுக்கு தலைமை வகித்து, உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்தவாறே தமிழில் வலைப்பக்கம் வைத்து எழுதிவருவோரது விவரங்களைக் கொண்ட “உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு“ நூலை வெளியிட்டு மேலும் பேசியதாவது

“தமிழ் தன்னை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டு வருகிறது. தமிழாகள் நாம் தான், தமிழ்வழியாக உலகத்தை இணைக்கும் பணியைச் செய்ய வேண்டும். அதற்கு, வளர்ந்துவரும் இணையத் தமிழைப் பயன்படுத்த கற்கவேண்டும். அதற்கான பயிற்சியை அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள்,  மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பயிற்சியைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்த அழகப்பா பல்கலைக்கழகம் துணைநிற்கும் என்றார்.

Advertisement

தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி பங்கேற்று   உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட 6 வகையானப் போட்டிகளில் வெற்றிபெற்ற படைப்பாளிகளுக்கு ரொக்கப் பரிசையும், கேடயங்களையும் வழங்கிப் பேசுகையில்,

இணையத் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு செய்துவரும்  பணிகளை, இணையத்தமிழ்ப் பயிற்சி, இணைய நூலக வளர்ச்சி, மின்னூலாக்கும் வழிமுறைகள் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தித் தமிழ்வளர்ச்சியோடு இணைந்த தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட முன்வரவேண்டும் எனக்குறிப்பிட்டார்.

விக்கிமீடியாவின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருமான அ.இரவிசங்கர், கவிஞர் வைகறையின் “நநதலாலா” எனும் இணைய மாதஇதழை வெளியிட்டுச சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, உலகளாவிய தகவல் களஞ்சியமான விக்கியில் ஆங்கிலத்திற்கு உள்ள வசதிகளைத் தமிழிலும் பெறவேண்டுமானால், நாம் இன்னும் கூடுதலான தகவல்களைத் திரட்டித்தர முன்வரவேண்டும். கட்டுரையில் தருவதைக் கவிதை, கதைகளில் தர முடியாது. தகவல் திரட்டும்போது அனைத்தும் தமிழில் கிடைப்பதை உறுதிப்படுத்தினால் தமிழ் தானே வளரும் ஆகவே, விக்கிபீடியா தளத்தில் அனைவரும் பங்களிக்கும் பயிற்சியைப் பெற முன் வரவேண்டும் என்றார். நிறைவுரையாற்றிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:

பத்திரிகைகளில் வரும் படைப்புகளின் தன்மை வேறு, இணையத்தளத்தில் பதிவு எழுதும் எழுத்துகளின் தன்மை வேறு. அச்சிட்ட பத்திரிகை, புத்தகங்களை ஒரு பிரதியை ஒரே நேரத்தில் ஒருவர்தான் படிக்க முடியும். ஆனால், மின்-நூல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்க தமிழ்நாட்டில் ஒரு சில ஆண்டுகளாகின்றன. ஆனால், மின் நூல்களைப் பதிவிறக்கம் செய்ய வைத்தால் ஒரு சில நாள்களிலேயே உலகமெல்லாம் அந்த நூல் பிரபலமாகிவிடும். புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதினால்தான் படைப்புகள் பிரபலமாகும் என்பது இன்றைக்கு மாறிவருகிறது. சிறுகதை, கவிதை, எந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள் நேரடியாக எழுதிய நாவல்கள் இப்போது உடனுக்குடன் பிரபலமாவது இணையத்தால் சாத்தியமாகி வருகிறது. எனவே, எழுத்தாளர்கள் இந்த இணையத்தைப் பயன்படுத்தி தமது படைப்புகளை உலகறியச் செய்ய முன்வரப் பயிற்சி பெற வேண்டும் என்றார்.

இதில், கணினி, சூழல், பெண்ணியம் தொடர்பான கட்டுரைப் போட்டிகளில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பரிசுபெற்றதும், இதில் புதுக்கவிதைப் போட்டியில் புதுக்கோட்டைக் கவிஞர்கள் செல்வா முதல்பரிசும், வைகறை மூன்றாம் பரிசும் மரபுக் கவிதைப் போட்டியில் கவிஞர் மகா.சுந்தர் இரணடாம் பரிசும் வென்றனர். மொத்தம் ரூ.60 ஆயிரம்  ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

கணினித் தமிழ்ச்சங்கத்தைப் புதுக்கோட்டையில் நிறுவனரும், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் தொடக்கவுரையாற்றினார். இதில், கரந்தை ஜெயக்குமார் எழுதிய “வித்தகர்கள்“ எனும் நூலும், மலேசியாவைச் சேர்ந்த தவ.ரூபன் எழுதிய “ஜன்னல் ஓரத்து நிலா“ எனும் நூலும் வெளியிடப் பட்டன.

கணினித் தமிழில் பிழை திருத்தம் செய்யும் “நாவி“ மற்றும் “வாணி“ எனும் மென் பொருள்களைக் கண்டுபிடித்த இளைஞர் மதுரை ராஜாராமன் எனும் “நீச்சல்காரன்” ,புதுக்கோட்டை ஞானாலயா நூலக நிறுவனர்  கிருஷ்ணமூர்த்தி, சர்வஜித் அமைப்பின் நிர்வாகி மருத்துவர் எஸ். ராமதாஸ், திரைப்படக் கவிஞர் இரா.தனிக்கொடி ஆகியோர்  கௌரவிக்கப்பட்டனர். ஆலங்குடியைச் சேர்ந்த ஓவியர்களின்  வலைப்பதிவர்களின் “கவிதை ஓவியக்கண்காட்சி நடைபெற்றுது.

சென்னைப் புலவர் ச.இராமாநுசம், மதுரையைச் சேர்ந்த சீனா என்கிற சிதம்பரம் போன்ற மூத்த வலைப் பதிவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் வரவேற்க, நிதிப் பொறுப்பாளர் கவிஞர் மு.கீதா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை கவிஞர் தங்கம்மூர்த்தி, மு.கீதா, ஜெயலட்சுமி, பொன்.கருப்பையா.,வைகறை, செல்வா, மது கஸ்தூரி ரெஙகன், ஸ்ரீமலையப்பன், கார்த்தி, அ.பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.முன்னதாக  “விதைக்-கலாம்“ எனும் அமைப்பின் இளைஞர்கள் மக்கள் மன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

அமெரிக்காவிலிருந்தும்,  புதுதில்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் இணைய எழுத்தாளர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை நேரலையாக உலகின் 22 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பார்த்து உடனுக்குடன் கருத்துகளைப் பரிமாறியதும் விழாவின் ஊடே அவ்வப்போது அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.