கொலையான இருவரை உடலை வாங்க மறுத்து நெல்லையில் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருநெல்வேலியில் புதன்கிழமை கொலையுண்ட இருவரின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலியில் புதன்கிழமை கொலையுண்ட இருவரின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி நகரம் பாறையடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாரியப்பன் (35), சண்முகம் (55). கட்டடத் தொழிலாளர்களான இவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தபோது கொலை செய்யப்பட்டனர். இவர்களுடன் வந்த ராஜ்குமார் என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாரியப்பன், சண்முகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டது குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இருவரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இருவரை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கொலையுண்ட இருவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கொலையுண்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்களது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர்.
2 ஆவது நாளாக புதன்கிழமை பாறையடி கிராமத்தில் கோட்டையடி, ரெங்கநாதபுரம், கண்டியப்பேரி, ஊருடையார்புரம், நதிபுரம், தென்பத்து, கோபாலசமுத்திரம், கொத்தன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அங்குள்ள கோயில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ப. ராஜ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சி. கார்த்திக், புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் செல்லப்பா, ராமகிருஷ்ணன் மற்றும் தலித் அமைப்பினர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையொட்டி பாறையடி, சாலியர் தெரு, நகரம், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே சண்முகம், மாரியப்பன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.