புதுக்கோட்டை ஒன்றியக்குழுத்தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியக்குழுவின் தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 13 வது வார்டு உறுப்பினர் ப. வெள்ளையம்மாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியக்குழுவின் தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 13 வது வார்டு உறுப்பினர் ப. வெள்ளையம்மாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை ஒன்றியக்குழுவுக்கு கடந்த 2011 அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில், வட்டார வார்டு வாரியாக, 1 -வது வார்டில் ஆர். தனலெட்சுமி(திமுக), 2 -வது வார்டில் ஆர்.பட்டு(சுயேச்சை), 3-வது வார்டில் க. சாமிக்கண்ணு(திமுக), 4 -வது வார்டில் ரா. சிகப்பாயி(அதிமுக), 5 -வது வார்டில் த. செல்லத்துரை(தேமுதிக), 6 -வது வார்டில் ஜி. பெரியய்யா(ஆர்ஜேடி), 7 -வது வார்டில் ம. பூங்கொடி(தேமுதிக), 8-வது வார்டில் கே. உமாதேவி(அதிமுக), 9-வது வார்டில் ஏ. ராமன்(அதிமுக), 10-வது வார்டில் மு. கலியமூர்த்தி(திமுக), 11 -வது வார்டில் கு. மாரி்முத்து(திமுக), 12 -வது வார்டில் இ. ஜெயலெட்சுமி(அதிமுக), 13 -வது வார்டில் ப. வெள்ளையம்மாள்(அதிமுக), 14 -வது வார்டில் ஏ.எம். ராஜீ(அதிமுக), 15 -வது வார்டில் டி. மாரிமுத்து(அதிமுக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மொத்தமுள்ள 15 இடங்களில் 7 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும், 4 இடங்களில் திமுக வேட்பாளர்களும், தேமுதிக வேட்பாளர்கள் 2 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதாதள வேட்பாளர் ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இதனிடையே தேமுதிக உறுப்பினர்கள் 2 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஒன்றியக்குழுத்தலைவராக உமாதேவி கருப்பையாவும், துணைத்தலைவராக இ. ஜெயலெட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒன்றியக்குழுத்தலைவராக இருந்த உமாதேவிகருப்பையா எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். இதையடுத்து அப்பதவி காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழக அரசால் உள்ளாட்சிகளில் காலியாகவுள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமென அறிவித்தது. இதையடுத்து புதுகை ஒன்றியக்குழு அலுவலகத்தில் இன்று(சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. ஊரக உதவி இயக்குநர்(தணிக்கை), தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ். முருகண்ணன் முன்னிலை வகித்து தேர்தலை நடத்தினார். இதில், தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் வெள்ளையம்மாள் பழனிவேலு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து எவரும் மனுத்தாக்கல் செய்யாததால், ஒன்றியக் குழுத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
இது குறித்து தகவலறிந்த, புதுகை சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான், நகர்மன்றத்தலைவர் ரா. ராஜசேகரன், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ். செல்லத்துரை, நகர வங்கியின் தலைவர் க. மாரிமுத்து, நிர்வாகிகள் என். மாசிலாமணி, க. பாஸ்கர், எஸ். அப்துல்ரகுமான் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்றியக்குழுத்தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத்தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் ஊர்வலமாகச் சென்று எம்ஜிஆர், அண்ணா உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.