முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம்: சாயத்தொழிற்சாலைக்கு தடை கோரி உண்ணாவிரதம்; சுப.உதயக்குமார் பங்கேற்பு

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் தனியார் சாயத்தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி மக்கள் வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் தனியார் சாயத்தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி மக்கள் வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட 20 அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் சுப.உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் தனியார் சாயத்தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம், குடிநீர் பாதிக்கப்படும் என்பதால் சாயத்தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி பெரியப்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், வாண்டையாம் பாளையம், தச்சம்பாளையம், காயல்பட்டு, பெரியாண்டிக்குழி, சினனாண்டிக்குழி உள்ளிட்ட சுமார் 20 கிராம மக்கள் பல்வேறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாயத்தொழிற்சாலைக்கு தடை விதிக்கக்கோரி பெரியப்பட்டில் செவ்வாய்க்கிழமை மக்கள் வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட 20 அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பசுமை தமிழகம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமார் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் சாயத்தொழிற்சாலையினால் இப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள், குடிநீர் பாதிக்கப்படும். கழிவுநீர் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும். எனவே அரசு இந்த சாயத்தொழிற்சாலைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

போராட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி, மீனவர் வாழ்வாதார இயக்க தலைவர் ஏகாம்பரம், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், பவானி நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் சுதந்திரன் உள்ளிட்ட 20 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி சுந்தரவடிவேலு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments