சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது தள்ளு, முள்ளு: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொதுவேலைநிறுத்தத்தை முன்னிட்டு ரயில் மறியலில் ஈடுபட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் மற்றும் போலீஸாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதில் நெஞ்சுவலி ஏற்பட்டு கே.பாலகிருஷ்ணன் எம்எலஏ அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பொதுவேலைநிறுத்தத்தை முன்னிட்டு ரயில் மறியலில் ஈடுபட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் மற்றும் போலீஸாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதில் நெஞ்சுவலி ஏற்பட்டு கே.பாலகிருஷ்ணன் எம்எலஏ அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தொழிலாளர்கள் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது, சாலை பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 11 தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
பொதுவேலைநிறுத்தத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் இன்று கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் ரயில் மறியில் ஈடுபட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினருக்கு ரயில் நிலையம் முன்பு தடுப்புகளை அமைத்து போலீஸார் அனுமதி மறுத்தனர். அப்போது கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதி வழங்கப்பட்டு ரயில் மறியல் செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் என தடுப்புகளை மீறி தொண்டர்களுடன் செல்ல முயன்ற போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் அனுமதி மறுத்த போலீஸாரை கண்டித்து கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் சாலையில் படுத்துக்கொண்டு மறியல் செய்தனர்
பின்னர் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு, ஏடிஎஸ்பி திருமலைசாமி தலைமையிலான போலீஸார் அவர்களை குண்டு கட்டாக கம்யூ கட்சியினரை தூக்கி வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீஸார் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, விவசாய சங்கத் தலைவர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச்செயலாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோரை குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்ற முயன்ற போது ஏற்பட்ட தள்ளு, முள்ளுவின் போது கே.பாலகிருஷ்ணன் மயக்கமடைந்தார். எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அருகே உள்ள காவேரி திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கே.பாலகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக அவரும், காயமடைந்த எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மறியலில் ஈடுபட முயன்ற 76 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆறுதல்: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் முடிவண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சி.உதயசந்திரன் உள்ளிட்டோர் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.