சென்னை வழக்குறைஞர் கொலை வழக்கில் ரவுடி கைது: மேலும் 2 பேருக்கு போலீஸ் வலை
சென்னையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி ஈசா (எ) ஈஸ்வரனை போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை 3 தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி ஈசா (எ) ஈஸ்வரனை போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை 3 தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் காமேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அப்போது அவருடன் இருந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஈசா (எ) ஈஸ்வரனிடம் போலீஸார் கடந்த 2 நாள்களாக விசாரித்து வந்தனர். போலீஸ் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்காதா ஈசாவிடம் இருந்து போலீஸார் சில தகவல்களை சேகரித்தனர்.
அதன்படி வழக்குரைஞர் காமேஷுக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொரு உயர்நீதிமன்ற வழக்குறைஞர் செந்தில் (எ) சம்போ செந்திலுக்கும் வழக்குகள் தொடர்பாக பிரச்னைகள் இருந்தததாம். இதனால் செந்தில், காமேஷை தீர்த்துக் கட்ட முடிவு செய்தாராம். இதற்கு ஈசா (எ) ஈஸ்வரனின் உதவியை செந்தில் நாடினாராம். ஈசா கடந்த 2011-ஆம் ஆண்டு சிவா (எ) தாடி சிவா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாம். இந்த கொலை வழக்கில் ஈசாவுக்கு உதவியாக கடலூரைச் சேர்ந்த யுவராஜ் இருந்தாராம்.
இந்த நிலையில் காமேஷை ஒரு வழக்குத் தொடர்பாக புதுவை சென்று வரலாம் என்று ஈசா அழைத்துச் சென்றாராம். அப்போது சம்போ செந்திலும் உடன் இருந்ததாகத் தெரிகிறது. புதுவையில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பியுள்ளனர். அப்போது, கடலூரில் இருந்து யுவராஜை குறிப்பிட்ட பகுதியில் வந்து நிற்குமாறு ஈசா அழைத்தாராம்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான சூணாம்பேடு அருகே வெண்ணாங்குபட்டு என்ற இடத்தில் வரும்போது, திட்டமிட்டப்படி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வழக்கை திசை திருப்பும் நோக்கில் சம்போ செந்தில் தூத்துக்குடிக்கும், யுவராஜ் கடலூருக்கும் தப்பிவிட்டதாக தெரிகிறது. தற்செயலாக துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறு துப்பாக்கிசூடு சம்பவம் நடத்துவிட்டதாக ஈசா போலீஸாரிடம் கூறி நாடமாடியது போலீஸாரின் தீவிர விசாரணையில் தெரியவந்ததாம்.
இதைத் தொடர்ந்து ஈசா (எ) ஈஸ்வரனை திருக்கழுக்குன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பஷீர் வீட்டில் இன்று இரவு ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சம்போ செந்தில் மற்றும் யுவராஜை பிடிக்க 3 தனிப்படை போலீஸார் தூத்துக்குடி, கடலூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.