விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க மாணவர்கள் 3 பேர் தேர்வு
தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து ஒரு மாணவி உள்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று தெரிவித்தார்.
தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து ஒரு மாணவி உள்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று தெரிவித்தார்.
பள்ளி மாணவ, மாணவிகளிடையே அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதிய ஆராய்ச்சி படைப்புகளை கண்டுபிடிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், மாவட்டம், மண்டல அளவில் நடத்தப்பட்ட கண்காட்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். இக்கண்காட்சியில் தேர்ந்து எடுத்தவர்களை மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த செப்.5,6 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதிலிருந்து 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு வகையான அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இதில், இறுதியாக 42 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. இவர்கள் தேசிய அளவில் புதுதில்லியில் நடைபெற இருக்கிற கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Advertisement
தேசிய அளவில் பங்கேற்போரின் விவரம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமிபுரம் புதூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் எஸ்.விஷ்வா, திருத்தங்கல் குளோரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் ஆர்.விநாயக், மம்சாபுரம் சிவந்திப்பட்டி நாடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதோடு, புதுதில்லியில் அக்.26,27 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.