முகப்பு
தமிழ்நாடு

மணிமுத்தாறு அணை மூடல் கரை சேருமா கார் சாகுபடி? கவலையில் விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் பாசனத்திற்கு 500 கனஅடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மணிமுத்தாறு அணை மூடப்பட்டதை அடுத்து கார் சாகுபடி கரை சேருமா என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் பாசனத்திற்கு 500 கனஅடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மணிமுத்தாறு அணை மூடப்பட்டதை அடுத்து கார் சாகுபடி கரை சேருமா என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால், எதிர்பார்த்தவாறு திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. தாமிரவருணி பாசனத்தில் நிகழ் கார் பருவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டு்ள்ளது. 5 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு்ள்ளது.

இப்பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து சராசரியாக 1,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிகழ் பருவத்தில் இவ்விரு மாவட்டங்களிலும் முழு அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

பருவ மழை குறைந்து அணைகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வந்ததால், பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. பாசனத்திற்கு சுழற்சி முறையில் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கார் சாகுபடிக்கு இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் அணைகளின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு கடந்த சில தினங்களாக பாசனம், குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் 500 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் 250 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.62 அடியாக குறைந்ததை அடுத்து அணை மூடப்பட்டது. இவ்விரு மாவட்டங்களில் பாசனம், குடிநீர் தேவைக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 504.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குறைந்து வரும் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 53.05 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 65.85 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 27.25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 54.82 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 33.45 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 56.25 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 24.37 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 15.75 அடியாகவும் இருந்தது.

நீர்மட்டம் 25 அடியாக குறைந்ததால் கடனாநதி அணை மூடப்பட்டது. தற்போது மணிமுத்தாறு அணையும் மூடப்பட்டது. நீர்மட்டம் 27 அடியாக உள்ள ராமநதி அணையும் ஓரிரு நாளில் மூடப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 311.34 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 27 கனஅடியும், கடனாநதி அணைக்கு 17 கனஅடியும், ராமநதி அணைக்கு 14 கனஅடியும், குண்டாறு, அடவிநயினார் அணைகளுக்கு தலா 5 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு 15.31 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பெட்டிச் செய்தி:

நீரின்றி கருகும் வாழை, நெற்பயிர்கள்: கடனாநதி அணை மூடப்பட்டதால், இப்பாசனத்தில் 4,500 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள  நெல் பயிர்கள் நீரின்றி கருகி வருகிறது. பிரதான அணையான மணிமுத்தாறு அணை மூடப்பட்டதால், தாமிரவருணி பாசனத்தில் கடை மடை பாசனப் பகுதியான பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிரான்சேரி உள்ளிட்ட பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர், வாழைப் பயிர்கள் கருகும் அபாய நிலையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டு் சாகுபடி செய்துள்ள திருநெல்வேலி கால்வாய், பாளையம் கால்வாய் பாசனத்தில் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள நெற் பயிருக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லாததால், இப்பகுதியிலும் நெற்பயிர்கள் கருகும் சூழல் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →