கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் தலா 5 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் தலா 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் கார் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் தலா 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் கார் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவ மழை நிகழாண்டில் குறைந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் நிகழ் கார் சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனால் கடையம், ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், பிரம்மதேசம், காக்கநல்லூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் கருகும் சூழல் உருவானது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 5 மி.மீ, சேர்வலாறு அணையில் 2 மி.மீ, கடனாநதி அணையில் 2 மி.மீ, ராமநதி அணையில் 3 மி.மீ, குண்டாறு அணையில் 15 மி.மீ, தென்காசியில் 4.5 மி.மீ, செங்கோட்டையில் 2.1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1132 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 148 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 105.20 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 54 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 55.80 அடியாக இருந்தது. அணையிலிருந்து 504.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 70.11 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 56 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 32 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 35.25 அடியாகவும் இருந்தது.
கடந்த 2 தினங்களில் இவ்விரு அணைகளின் நீர்மட்டம் தலா 8 அடி உயர்ந்த காரணத்தால் ராமநதி, கருணை ஆறு பாசனத்தில் கருகும் பருவத்தில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 53.99 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 34.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 56.25 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 24 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 11.20 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 14.25 அடியாகவும் இருந்தது.