ஜெயலலிதா இருந்திருந்தால் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடந்திருக்குமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே.
தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் அவரது அறை உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இதில், ராம மோகன ராவ் மகன் விவேக்கின் வீட்டில் இருந்து ஏராளமான சொத்து ஆவணங்களும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ராம மோகன ராவ் வீடு மட்டும் அல்லாமல், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும், துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆனால், தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை மீறி, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என்பதற்காக மட்டுமே துணை ராணுவம் வரவழைக்கப்பட்டதாக மத்திய அரசு பதில் கூறியது.
எனினும், தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தமிழக மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இது வருமான வரித்துறையினரின் நேர்மையான நடவடிக்கையா அல்லது அரசியல் பின்னணி கொண்டதா என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
அதே சமயம், மற்றொரு பலமான கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. அதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த சோதனைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டிருப்பார்களா என்பதே அது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் சிபிஐ முன்னாள் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் இந்த சோதனை நடந்திருக்காது என்றே உறுதியாகக் கூறியுள்ளார்.