முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு:தலைவர்கள் கண்டனம்

உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Updated On : 19 ஜூலை, 2016 at 8:05 PM
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்: உத்தரகண்ட் மாநிலத்தில் துரதிருஷ்டவசமாக தலித் பிரச்னை எழுப்பப்பட்டு, திருவள்ளுவரின் சிலை நிறுவப்படாமல் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. கருப்பு உறையில் மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்த்து, தமிழ் சமுதாயமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவையே தலைகுனிய செய்துள்ளது. திருவள்ளுவர் மதத்துக்கோ, இனத்துக்கோ சொந்தமானவர் இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும்.

ராமதாஸ்: ஹரித்துவாரில் உள்ள பூங்காவில்  திருவள்ளுவர் சிலை கருப்பு உறையிடப்பட்டு குப்பைகளுடன் கிடக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. வான்புகழ் பெற்ற திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஹரித்துவாரில் கேட்பாரற்று கிடக்கும் வள்ளுவரின் சிலையை உடனடியாக மீட்டு, தமிழகத்துக்குக் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட வரும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் வளாகத்திலோ, பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு நிறுவன வளாகத்திலோ வள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும்.

Advertisement

ஜி.கே.வாசன்: ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை வைப்பதில் சர்ச்சை எழுந்திருப்பது, சஞ்சலத்தைத் தருகிறது. இதனை விவாத பொருளாக்குவது வேதனைக்குரிய செயலாகும். கருப்பு உறையில் திருவள்ளுவர் சிலையைப் போட்டு வைத்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. அந்தச் சிலையை உரிய இடத்தில் நிறுவ வேண்டும். அதுவரை சிலையைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவரைப் பற்றிய தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.