தமிழ்நாடு

திருநங்கைகளுக்கான நலத் திட்டங்கள்: தமிழகம் முன்னோடி

மத்திய அரசு விரைவில் கொண்டு வரவிருக்கும் திருநங்கைகள் சட்ட மசோதாவுக்கு முன்னோடியாக, தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் அமைந்துள்ளன.

தினமணி

மத்திய அரசு விரைவில் கொண்டு வரவிருக்கும் திருநங்கைகள் சட்ட மசோதாவுக்கு முன்னோடியாக, தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் அமைந்துள்ளன.

சமூகத்தில் ஆண்கள், பெண்கள் என்ற இரு பாலினத்தவர் மட்டுமல்லாது, திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

ஆனால், நமது சமுதாய அமைப்பில் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கை முறை, அவர்களது தேவைகளை நிறைவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சவாலாக உள்ளன. மேலும், மூன்றாம் பாலினத்தவர் என வகைப்படுத்தப்படுபவர்களில் திருநங்கைகள் மட்டுமல்லாது திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரும் தங்களது அடையாளத்தை இனம் காண முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 35,000 பேர் உள்பட நாடு முழுவதும் 5 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 6,000 திருநங்கைகள் வசிக்கின்றர்.

தமிழக அரசின் சமூக நலத் துறை மூலம் நல வாரியம் அமைக்கப்பட்டு, திருநங்கைகளுக்கான நலத் திட்டங்கள் 2008-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், திருநங்கைகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தனிநபர் மசோதா: இந்த நிலையில், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில், திருநங்கைகளுக்கு தனி நீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர உரிமைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்துத் தரப்பு உறுப்பினர்களும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தனர்.

தனிக் குழுக்கள்: திருநங்கைகளின் பிரச்னைகள், மேம்பாடு குறித்து அவர்களுடன் கலந்தாலோசிக்க மத்திய அரசு விரும்பியது. அதன்படி, வடக்கு, தெற்கு, வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தலா 2 பேர் அடங்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 21, 22-இல் திருநங்கைகளின் பிரதிநிதிகள் இடம் பெற்ற இந்தக் குழுவினரிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

இந்தக் குழுவில் தென்னிந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை சுதா உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இதுகுறித்து திருநங்கை சுதா கூறியதாவது:

இந்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தில் திருநங்கைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, உரிமைமகள், இடஒதுக்கீடு, நடைமுறை பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகம் முன்னோடி: இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், அடையாள அட்டை, குடும்ப அட்டை, பசுமை வீடுகள், இதர நல உதவிகள் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசின் குழு ஏற்றுக் கொண்டது. அத்துடன், திருநங்கைகளுக்கு அதிகப்படியான நலத் திட்ட உதவிகளை வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாக இதர மாநிலத்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் திருநங்கைகளுக்கான சட்ட மசோதாவில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களையும் சேர்க்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்: இந்த நிலையில், திருநங்கைகள் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 20 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. நிகழ் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவில், திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எந மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.

திருநங்கைகள் பலரும் பிழைப்புக்காக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானால், திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெற்று நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி பிறக்கும்.

மேலும், பாடத் திட்டங்களில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருநங்கைகள் அரசியல் உள்பட அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT