தமிழ்நாடு

மண் வளத்தை அதிகரிக்க கோடை உழவு அவசியம்

தற்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கும் வகையில்

தினமணி

புதுக்கோட்டை: தற்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கும் வகையில் கோடை உழவு செய்யலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டம், உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கிடைக்கும் மழை கோடைமழை எனப்படுகிறது.
 இதைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். வெப்ப மண்டலத்தில் உள்ள நம் புவியானது, கோடைக் காலத்தில் மேல்மண் அதிக வெப்பமடைகிறது.
 இந்த வெப்பமானது கீழ்ப்பகுதிக்குச் செல்லும்போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே, மேல் மண்ணை உழுது ஒரு புழுதிப்படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர் சூழ் மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால் நிலத்திலுள்ள ஈரம் ஆவியாகாமல் இப்புழுதிப் படலம் தடுத்துவிடும்.
 கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. கோடை உழவால் மேல் மண் துகள்களாகிறது. இதனால் மண் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்துவிடும்.
 இதனால் நிலத்தில் நீர் இறங்கும் திறன் உயரும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. வயலிலுள்ள களைகள், குறிப்பாக கோரை போன்றவை கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் உலர வைத்து அழிக்கப்படுகின்றன. கோரைக் கிழங்குகளைக் கைகளால் சேகரித்தும் அழிக்கலாம்.
 நிலத்தின் அடியில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளின் கூண்டுப் புழுக்கள் கோடை உழவு செய்வதால் வெளியில் கொண்டு வரப்பட்டு வெயிலில் காயவைக்கபட்டு அழிக்கப்படுகின்றன. பறவைகள் அவற்றை உண்டு, கூண்டுப் புழுக்களை அழிக்கின்றன.
 அறுவடை செய்யப்பட்டுள்ள வயல்களிலுள்ள முந்தைய பயிரின் தாள்கள், வேர்கள், தட்டைகள் போன்றவை கோடை உழவின்போது மடக்கி விடப்படுவதால் மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு மேம்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.
 கோடை உழவைச் சரிவுக்குக் குறுக்கே செய்தல் வேண்டும். அதனால் மண்ணரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் மழை பெய்கிறபோது அம்மழை நீரானது வேகமாக வழிந்தோடி மண்ணரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 இதுகுறித்து குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் (பொ) பெ. கந்தசாமி கூறியது:
 கோடை உழவு செய்வதால் மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் நிலத்துக்குள் எளிதாகப் புகுந்து சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் உயரும். எனவே, உழவர்கள் தங்கள் பகுதியில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து மண்வளம், நீர்வளத்தைப் பெருக்கிட வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT