குடிநீர் பற்றாக்குறை: மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
திருப்பூரில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை செவவாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை செவவாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி, 18-வது வார்டு, குருவாயூரப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் செயய்ப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் குடிநீருக்காக பெரும் சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது:
குருவாயூரப்பன் நகர் மற்றும் அதனை சுற்று சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது குடியிருப்பு உருவானது. எனினும் சாலை, தெருவிளக்கு, சாக்கடைக் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதோடு குடிநீர் பிரச்சனையும் கடுமையாக உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதர உபயோகத்திற்கான உப்பு தண்ணீர் விநியோகமும் முறையாக நடைபெறவில்லை. எனவே காசு கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
ஏற்கனவே, குடிநீர் பிரச்னைக்காக வாரணாசிப்பாளையம் பிரிவில் இருமுறை சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்துவிட்டு, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்து சென்றனர். எனினும் பிரச்சனை மட்டும் தீரவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.
தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்திய மண்டல இளநிலைப் பொறியாளர் ஹரி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால், குருவாயூரப்பன் நகர் பகுதியில் குழாய் வால்வு சீரமைப்பு பணியை செவ்வாய்க்கிழமையே தொடங்கி, பணியை நான்கு நாள்களில் முடித்து குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகவும், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்து மாநகராட்சி நிதியை பெற்று நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முற்றுகை போரட்டம் கைவிடப்பட்டது.