முகப்பு
தமிழ்நாடு

திமுகவில் இணைந்தது மக்கள் தேமுதிக ஜூலை 17-இல் இணைப்பு விழா

தேமுதிகவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வந்த மக்கள் தேமுதிக புதன்கிழமை திமுகவில் இணைந்தது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தேமுதிகவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வந்த மக்கள் தேமுதிக புதன்கிழமை திமுகவில் இணைந்தது.

 சேலத்தில் மிகப்பெரிய அளவில் ஜூலை 17-ஆம் தேதி இணைப்பு விழா நடைபெறும் என்று மக்கள் தேமுதிக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறினார்.

 சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வி.சி.சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை காலை 10.50 மணிக்கு வந்தனர்.

 கருணாநிதியைச் சந்தித்து மக்கள் தேமுதிகவை இணைப்பது தொடர்பான கடிதத்தைக் கொடுத்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் வி.சி.சந்திரகுமார் கூறியது:-

 மக்கள் தேமுதிகவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட வந்த நாங்கள் அனைவரும் திமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம். மக்கள் தேமுதிக கலைக்கப்பட்டு விட்டது.

 தேமுதிகவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிர்வாகிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தேமுதிகவில் அதிருப்தியுடன் உள்ளவர்களை திமுகவில் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். சேலத்தில் ஜூலை 17 இணைப்பு விழா நடைபெறும். அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

 விஜயகாந்தை அழைக்கவில்லை: திமுகவுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று விஜயகாந்த் கூறியிருக்கலாம். ஆனால், அவரை திமுக கூட்டணிக்கு யாரும் அழைக்கவில்லை. ஏற்கெனவே, தேமுதிகவினர் பலர் திமுகவில் இணைந்துவிட்டனர். தமிழக அரசியலில் விஜயகாந்தை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.

 தேர்தலில் திமுக தோல்வியடைய நான்தான் காரணம் என்று வைகோ கூறியிருப்பது உண்மைதான். இதைத்தான் தேர்தலுக்கு முன்பு நாங்கள் கூறினோம். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து திமுகவை ஆட்சி வராமல் செய்வதுதான் அவர் நோக்கம் என்று அவர் கூறினார்.

 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் தேமுதிக நிர்வாகிகளும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுமான பார்த்திபன், சேகர் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →