உடல்நலக் குறைவின் காரணமாக தமிழறிஞர் முனைவர் இரா.செல்வக்கணபதி (77) சென்னையில் புதன்கிழமை (மார்ச் 2) காலமானார்.
மறைந்த தமிழறிஞர் செல்வக்கணபதிக்கு மனைவி சந்திரா செல்வக்கணபதி, மகன் அருண், மகள் பாரதி ஆகியோர் உள்ளனர்.
திருவாரூரில் 1940-ஆம் ஆண்டு பிறந்த இவர், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்பு அதே கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து 1992 முதல் 94 வரை அக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பதவியை வகித்துள்ளார். 1996-இல் பணி ஓய்வு பெற்றார்.
சைவ சமயம் சார்ந்த... இளமை முதலே தமிழ் இலக்கியம், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர், சைவ சமயம் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சைவ சமயக் களஞ்சியம் என்ற 7 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய 10 தொகுப்புகள் கொண்ட பெருந்தொகுப்பு நூலை வெளியிட்டார். இதுதவிர, "தருமபுர ஆதீனமும் தமிழும்', "சைவமும் தமிழும்', "21-ஆம் நூற்றாண்டில் சங்க இலக்கியம்', "கம்பனில் பெண்ணியம்', "இடர் களையும் திருப்பதிகங்கள்', "விடை தேடும் வினாக்கள்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். திருவாசகப் பேருரை, பன்னிரு திருமுறைகள், கம்ப ராமாயணப் பேருரை, பெரிய புராணப் பேருரை உள்ளிட்ட சொற்பொழிவு குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பேராசிரியர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட இவர், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களில் உரையாற்றியுள்ளார்.
பெற்ற விருதுகள்: சென்னை பல்கலைக்கழகத்தில் 1965-ஆம் ஆண்டு தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி, செந்தமிழ் வாரிதி, சிவஞான கலாநிதி, ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இன்று இறுதிச் சடங்கு: சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வியாழக்கிழமை (மார்ச் 3) காலை 11 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 94440-21113.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.