முகப்பு
தமிழ்நாடு

சங்க காலத்துக்கே அழைத்துச் செல்லும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்!

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தில் இடம் பெற்றுள்ள சிற்பங்களும், ஓவியங்களும் சங்க காலத்துக்கே அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதால், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.

Updated On : 6 மார்ச், 2016 at 4:01 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தில் இடம் பெற்றுள்ள சிற்பங்களும், ஓவியங்களும் சங்க காலத்துக்கே அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதால், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.

பழந்தமிழர்களின் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூ.3.46 கோடியில் அமைக்கப்பட்ட பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடக்கிவைத்தார்.

மொத்தம் ஐந்து அரங்குகளில் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

என்னென்ன சிறப்பம்சங்கள்? ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தேர்வடச் சங்கிலி, அன்னப்பறவை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஒளவையார், தமிழ்த் தாய், தொல்காப்பியர், கபிலர் உருவங்கள், பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை சிலை உருவங்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடைப்பிடிக்கப்பட்ட நீர் மேலாண்மை, பாசன முறைகள், நெசவுத் தொழில்நுட்பங்கள், குருகுலக் கல்வி, புறநானூற்றுச் சம்பவங்கள், பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவைதவிர, தமிழ் வேந்தர்கள் பயன்படுத்திய வாள், கேடயம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு போர்க் கருவிகள், அரியாசனம், ஆயுதங்கள் தயாரிக்கும் உலைக்களம், மேற்கொண்ட தொழில்கள் ஆகியவை பழந்தமிழர்களின் வீரத்தையும், நிர்வாகத் திறமையையும் பறைசாற்றுகின்றன.

சர்வதேச தரத்தில்... இந்தக் காட்சிக் கூடத்தைப் பார்வையிட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான்சி பிரியா, வேலூரைச் சேர்ந்த ஹேமா, தமிழரசன் உள்ளிட்டோர் கூறியதாவது: இங்குள்ள பழந்தமிழரின் ஓவியங்களும், சிற்பங்களும் பார்வையாளர்களை சங்க காலத்துக்கே அழைத்துச் செல்லும் வகையில் சர்வதேசத் தரத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பரிபாடல், புறநானூறு, நெடுநல்வாடை போன்ற இலக்கியங்களின் நிகழ்ச்சிகளை ஓவியமாகவும், பழங்கால அரண்மனை, கோயில்கள், வீடுகளின் அமைப்பை மரச்சிற்பங்களாகவும் காணும்போது அவற்றின் பெருமைகளை உணர முடிகிறது.

குறிப்பாக, மயிலுக்கு போர்வை வழங்கிய பேகன், முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி போன்ற தமிழ் மன்னர்களின் சிறப்புகளை குழந்தைகளும் தெரிந்துகொள்ளும் வகையில் பட விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதை அறிய இந்த வாழ்வியல் கூடம் ஒரு வழிகாட்டியாக உள்ளது என்றனர் அவர்கள்.

இலவச அனுமதி: இதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன், காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர் ஆ.மணவழகன் ஆகியோர் கூறியதாவது:

காட்சிக் கூடம் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு தாற்காலிகமாக இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி, விரைவில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். வாரத்தின் அனைத்து நாள்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காட்சிக் கூடத்தைப் பார்வையிடலாம். பழந்தமிழரின் சிறப்புகளை மாணவர்களை அறியச் செய்யும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விரைவில் அழைப்பு விடுக்கவுள்ளோம் என்றனர் அவர்கள்.

திரையரங்கம்

இந்தக் காட்சிக்கூடத்தையொட்டி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்கம் அமைந்துள்ளது. இதில் மொத்தம் 56 இருக்கைகள் உள்ளன.

பார்வையாளர்கள் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பாக இந்தத் திரையரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டு சங்ககாலத் தமிழர்களின் போரியல், ஆட்சித்திறன், மருத்துவ முறை, கல்வி போன்றவை தொடர்பான 10- 15 நிமிஷங்கள் கொண்ட குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

இதுகுறித்து குறும்படத்தை இயக்கிய காவ்யா பிரகதீஷ்வரன் கூறியதாவது;

பல்வேறு தமிழ் இலக்கியங்களின் குறிப்புகள், பழைமையான இடங்களுக்கு நேரடிப் பயணம் போன்ற முயற்சிகளின் அடிப்படையில் இந்தக் குறும்படங்களை இயக்கியுள்ளோம். இவற்றுக்கு நடிகர் நாசர், நடிகை ரோகிணி ஆகியோர் பின்ணணிக் குரல் கொடுத்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.