முகப்பு
தமிழ்நாடு

ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுவை முதல்வர் வி.நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:39 PM
பகிர்:


புதுச்சேரி: ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுவை முதல்வர் வி.நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம் சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர். இருகட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லித்தோப்பு வேல்முருகன் நகர், சத்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வீடு வீடாகச் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாரத பிரதமர் மோடியின் அறிவிப்பு பணம் சேமித்து வைத்துள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த 15 ஆண்டு காலமாக ரூபாய். 500, 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகிறது.

திடீரென அந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்திருப்பது, பொருளாதாரம், வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்தும். கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கருப்பு பணத்தை மீட்போம் என மோடி அறிவித்தார். ஒவ்வொரு இந்தியன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் எனக்கூறினார். எனது வங்கிக்கணக்கில் அத்தொகை வரவில்லை.
உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு நடவடிக்கையால் ரூ.26 ஆயிரம் கோடி கருப்பு பணமும், செப்டம்பர் 30-ம் தேதி வரை அளிக்கப்பட்ட சலுகையால் ரூ.56000 கோடியும் வெளிவந்தது. மொத்த தொகையும் வரவில்லை.

கருப்பு பணம் வைத்துள்ள சில 100 பேர் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் 125 கோடி பேர் பாதிக்கும் வகையில் மோடியின் செயல்பாடு உள்ளது.
பிரதமரின் இந்த முடிவு ஏற்கத்தக்கது அல்ல. அவரது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.