தமிழ்நாடு

கயானாவில் தமிழ்மொழி, பண்பாட்டை வளர்க்க பயிற்சி மையம்: பிரதமர் மோசஸ் வீ.நாகமுத்து வலியுறுத்தல்

DIN

கயானா நாட்டில் தமிழ்மொழி, பண்பாட்டை வளர்க்க தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பயிற்சி மையம் அமைக்க முன்வர வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் மோசஸ் வீ.நாகமுத்து வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகம் சார்பில் குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கயானா நாட்டின் பிரதமர் மற்றும் துணை அதிபர் மோசஸ் வீ.நாகமுத்துவுக்குச் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாரத் பல்கலைக்கழக நிறுவனர் வேந்தரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஜெகத்ரட்சகன், மோசஸ் வி.நாகமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

விழாவில் மோசஸ் வீ.நாகமுத்து பேசியது:
என் முன்னோர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில், பாரத் பல்கலைக்கழகம் இன்று வழங்கி இருக்கும் கெளரவ டாக்டர் பட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மகத்தான கெளரவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கயானாவில் பல தலைமுறைகளாக தென் இந்தியர்களும், வட இந்தியர்களும் வசித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஆங்கில மொழியில்தான் பேசுகின்றனர். பேச்சு வழக்கில் அங்கு தமிழ் அறவே இல்லை. தமிழ்மொழி, தமிழ் கலாசாரம், பண்பாடு மிகப் பழமையும் பெருமையும் கொண்டது என்பதை நான் நன்கறிவேன். தமிழ்மொழி, பண்பாடு குறித்து கயானாவில் உள்ள தமிழர்களுக்கு பயிற்றுவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் அங்கு பயிற்சி மையங்கள் அமைக்க முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டுடன் மட்டுமல்லாமல், உலகெங்கும் விரிந்து பரவி இருக்கும் தமிழ் சமூகத்துடனும் கயானா தமிழர்கள் நல்லுறவை வளர்க்கும் வகையில் கயானாவை மேம்படுத்த விரும்புகின்றேன்.

இந்திய அரசு கயானா நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் வகையில் கயானாவில் ரூ.6 கோடி செலவில் நவீன தகவல் தொழில்நுட்ப மையம் அமைத்து 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்க சம்மதித்து உள்ளது என்றார் அவர்.

கயானா பிரதமர் மனைவி சீதா மோசஸ் வீ.நாகமுத்து, பாரத் பல்கலைக்கழக வேந்தர் அவ்வை நடராஜன், சென்னை மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சுதா சேஷய்யன், ஸ்ரீலட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெ.ஸ்ரீநிஷா, ஸ்ரீபாலாஜி கல்விக்குழும நிர்வாக இயக்குனர் என்.இளமாறன், இணை வேந்தர் எம்.பொன்னவைக்கோ, துணைவேந்தர் வி.கனகசபை, பதிவாளர் எஸ்.பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT