தமிழ்நாடு

செம்மையான வாழ்க்கைக்கு நீதி இலக்கியங்கள் அடித்தளம்: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் மு.ராஜாராம்

DIN

செம்மையான வாழ்க்கைக்கு நீதி இலக்கியங்கள் அடித்தளமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் மு.ராஜாராம் கூறினார்.
அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள், ஆத்திச்சூடி நூல்களின் திறனாய்வுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக அரபுத் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கூட்டத்தில் மு.ராஜாராம் பேசியதாவது:
திருக்குறளில் அறிவு சார்ந்த செய்திகளைத் தவிர்த்து மாறாத் தன்மை கொண்ட மெய்யறிவு கருத்துகளே அதிகம் இடம்பெறுகிறது. திருக்குறள் இயல்பியலும் இலக்கியமும் கலந்த நீதி நூலாகும். அதேபோன்று ஆத்திச்சூடி தன்னிகரில்லாத ஞானக்கருவூலம். அது வஞ்சித்தல், புறங்கூறல் போன்ற பல நோய்களைப் போக்கும் ஒப்பற்ற சர்வரோக நிவாரணியாகும். செம்மையான வாழ்க்கைக்கு நீதி இலக்கியங்கள் அடித்தளமாக இருக்கும்.
அன்னை, தந்தை, ஆசான் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவனைக்கூட நான்காவது இடத்தில் வைத்து வழிபடக்கூடிய வரலாறுதான் தமிழ் இலக்கியத்தின் மிகத் தொன்மை வாய்ந்த அறநெறி வகையாகும். மொழிபெயர்ப்பு என்பது அறிவின் கூட்டுமுயற்சியாகும். சிறந்த நூல்களை மொழிபெயர்ப்பவர்களை அரசு தொடர்ந்து கௌரவித்து வருகிறது. மொழி பெயர்ப்புக்காக ஆண்டுதோறும் ரூ. 7 லட்சம் மதிப்பில் 10 விருதுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பதினென்கீழ்கணக்கு நூல்கள் ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்புக்கென தனித்துறையை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்றார் அவர்.
முன்னதாக உலகத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்து மொழிபெயர்ப்பின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். இதில் தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் ஒப்பிலா மதிவாணன், தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகைத் துறைத்தலைவர் ய.மணிகண்டன், அரபு மொழிப்பாட திட்டக்குழுத் தலைவர் அ.ஜாகீர் உசைன், அப்துல்ரகுமான் பல்கலைக்கழக பேராசிரியர் செய்யது மஸ்ஊது ஜமாலி, திருக்குறள் ஆய்வறிஞர் ப.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT