தமிழ்நாடு

உதவித் தொகை பெற அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்

DIN

தங்களது ஏடிஎம் அட்டை, அதன் ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை வங்கி முகவரிடம் ஒப்படைத்தால்தான் அரசின் உதவித் தொகையைப் பெற முடியும் என்ற நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது ரிசர்வ் வங்கி விதிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, மானியங்களும், உதவித் தொகைகளும் பயனாளியை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்ற மத்திய-மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிரானது என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.
மத்திய-மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை, மானியம், பிற உதவித் தொகைகள் பெறுவதில் பயனாளிகளுக்கு ஏற்பட்டு வந்த பல்வேறு சிக்கல்கள், முறைகேடுகளைக் களையும் வகையில் நேரடி மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இந்தத் திட்டம் மூலம், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித் தொகை, மானியத் தொகை ஆகியவை செலுத்தப்படுகின்றன.
தமிழக அரசின் விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகைத் திட்டம் எனப் பல்வேறு உதவித் தொகைத் திட்டங்கள் இந்த நேரடி மானியத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றபோதிலும், அதைப் பயனாளிகள் நேரடியாக எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட வங்கி நியமிக்கும் முகவரிடம்தான் அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதற்காக உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுடைய வங்கி ஏடிஎம் அட்டை, அதன் ரகசிய எண் (பின் நம்பர்) ஆகியவற்றை வங்கி முகவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பி.சிம்மச்சந்திரன் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய வங்கி ஏடிஎம் அட்டையையும், அதன் ரகசிய எண்ணையும், அவை தொடர்பான அஞ்சல் உறையையும் பிரிக்காமல் சம்பந்தப்பட்ட வங்கியின் முகவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் உதவித் தொகையைப் பெற முடியும். அவ்வாறு ஒப்படைக்காத அல்லது அஞ்சல் உறையைப் பிரித்துப் பார்த்த மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் உதவித் தொகை வழங்கப்படுவதில்லை. வங்கியிலோ அல்லது ஏடிஎம் இயந்திரத்திலோ பணம் எடுக்கவும் முடியாது.
இது அரசின் நேரடி மானியத் திட்டத்தையே கேள்விக்குறியாக்குகிறது. அதோடு, ஒருவரின் வங்கி விவரங்களை பிறருக்கு அளிக்கக் கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கும் இது எதிரானதாகும்.
இந்த நடவடிக்கை காரணமாக, எங்களுடைய வங்கிக் கணக்குக்கு வரும் உதவித் தொகை அல்லாத வேறு தொகைகளைக்கூட, சம்பந்தப்பட்ட வங்கி முகவர் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும், ஒவ்வொரு முறையும் தமிழக அரசின் ரூ.1,000 உதவித் தொகையைப் பெற மாற்றுத்திறனாளிகள் ஆட்டோவுக்காக ரூ.200 செலவிட வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த நிபந்தனைகளை ரத்து செய்து, வீட்டின் அருகில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்திலேயே பணத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை வழங்கும் இந்தியன் வங்கிக்கான ஜாபர்கான்பேட்டை முகவர் மணிக்கொடி கூறியதாவது:
பயனாளி இறந்துவிட்ட பிறகும்கூட, அவரின் வீட்டில் உள்ளவர்கள் பொய் சொல்லி உதவித் தொகையைப் பெற்றுச் சென்று விடுகின்றனர். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவே, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் உத்தரவின் பேரிலேயே மாற்றுத்திறனாளிகளின் வங்கி ஏடிஎம் அட்டை, ரகசிய எண் விவரங்களை நாங்களே பெற்றுக் கொள்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT