அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் வீட்டில் ரூ.2.2 கோடி பறிமுதல்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் வீட்டில் இருந்து ரூ.2.2 கோடியை வருமான வரித்துறை
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் வீட்டில் இருந்து ரூ.2.2 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் 37 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் மத்திய போலீஸார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், இலுப்பூர் அருகே உள்ள அமைச்சரின் பொறியியல் கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசல் பகுதியில் அமைந்துள்ள அமைச்சருக்கு சொந்தமான கல் குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் பங்களா, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுச்சாலையையொட்டி உள்ள கெங்கு ரெட்டி தெருவில் இருக்கும் அமைச்சரின் சகோதரி வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் வீட்டில் இருந்து ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா அல்லது வாக்காளர்களுக்கு கொடுக்க சொல்லி அமைச்சர் கொடுத்த பணத்தில் பதுக்கப்பட்டதா என்பது விசாரணைக்கு பிறது தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வருவான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் இருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.