அதிமுகவின் இரண்டு அணிகள் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியைக் கைப்பற்றத்தான் போட்டியிடுகிறார்களே தவிர மக்களுக்குச் சேவை செய்வதற்காக அல்ல என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து ஸ்டாலின் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது: அதிமுக அணிகளின் சார்பில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி அதிகாரம் செலுத்தி மீண்டும் முறைகேடுகளில் ஈடுபடுவதுதான் அவர்களது முக்கிய நோக்கம் ஆகும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக திமுக தொடர்ந்து எதிர்த்து வந்திருந்தாலும் அவரிடம் கண்ணியக்குறைவாகவோ, கீழ்த்தரமாகவோ நாங்கள் நடந்து கொண்டதில்லை.
ஆனால் ஜெயலலிதாவால் நீண்டகாலம் பதவியில் இருந்த ஓபிஎஸ் தற்போது ஜெயலலிதாவின் சவப்பெட்டி பொம்மையை வைத்து அரசியல் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டார்.
75 நாள்கள் மருத்துவமனையில் இருந்தபோது பன்னீர்செல்வமும்தான் உடனிருந்தார். எனவே ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீதிவிசாரணை நடத்தப்படும்.
திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மருதுகணேஷ் இப்பகுதியில் மக்கள் பணியாற்றுவார். அவரது செயல்பாடுகளுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார் ஸ்டாலின்.
பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி, மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.