முகப்பு
தமிழ்நாடு

அமைச்சரிடம் எந்த பணமும் வாங்கவில்லை: மருத்துவரின் மறுப்பு ஏற்படுத்தும் சந்தேகங்கள்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து தான் எந்த பணமும் பெறவில்லை என்று டாக்டர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 12 ஏப்ரல், 2017 at 12:35 PM
பகிர்:


சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து தான் எந்த பணமும் பெறவில்லை என்று டாக்டர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறுவதற்காக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து தான் ரூ.5 லட்சத்தை பெற்றதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் நேற்று அவர் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் பீலே, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான கட்டணத்தை அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் கட்ட மறுத்ததால், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அது குறித்து சொல்லி, அதனை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தேன். மற்றபடி, ஜெயலலிதாவிடம் கைரேகை பெறுவதற்காக அந்த தொகையை வாங்கியதாகக் கூறுவதில்  உண்மை இல்லை என்று தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்திருந்ததாக நேற்று செய்தி வெளியானது.

Advertisement

திடீரென, அவர் எழுத்துப்பூர்வமாக நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில், நான் எந்த ஊடகத்துக்கும் பேட்டி அளிக்க வில்லை. விஜயபாஸ்கரிடம் இருந்து எந்த பணமும் வாங்கவில்லை என்று முற்றிலுமாக மறுத்திருந்தார்.

இதற்கிடையே, பீலேவின் ஹோட்டல் கட்டணத்துக்காகவே விஜயபாஸ்கரிடம் ரூ.5 லட்சம் பெறப்பட்டது என்று பாலாஜி கூறியது தொடர்பான ஆடியோ பதிவை தமிழ் செய்தி ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது. தாங்கள் சொன்ன செய்தியையும் அது உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், மக்களுக்கு இரண்டு விதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன. முதலில் ஹோட்டல் கட்டணத்தைக் கட்டுவதற்காக விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், அவரது உதவியாளர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கொண்டு வந்து ஹோட்டலில் கட்டியதாகவும், அரசு தரப்பில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தான் இதை செய்ததாகவும் டாக்டர் பாலாஜி கூறியிருந்தார்.

ஆனால், மறுநாளே, இது குறித்து எதுவும் சொல்லாமல், விஜயபாஸ்கரிடம் இருந்து தான் எந்த பணத்தையும் பெறவில்லை என்றும், அதுபோன்ற தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

அப்படியானால், விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மை மீது சந்தேகம் எழுகிறது. இது வேண்டாத நபர்களை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற ஆவணங்கள் வேண்டும் என்றே கசியவிடப்பட்டதா என்றும் சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.

வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல்வேறு ஊடகங்களில் கசிந்தது எப்படி என்றும், இதுவரை சாத்தியமில்லாத ஒன்று, தற்போது சாத்தியமானது எப்படி என்றும் அரசியல் விமரிசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே சமயம்  சமூக ஆர்வலர்களோ, விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவர்களது கட்சியின் பேச்சாளர்கள், அந்த ஆவணங்களில் உண்மையில்லை, அது ஏதோ விடுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்டது. அவை எப்படி உண்மை என்று சொல்ல முடியும். இது திட்டமிட்ட சதி என்று கூறி வருகிறார்கள்.

அப்படி இருக்கும் போது, ஒரு ஆவணத்தில் இருக்கும் ஒரு பணப்பரிமாற்றம் குறித்து டாக்டர் பாலாஜி உரிய விளக்கத்தை முன்னதாக அளித்துள்ளார். ஒரு ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் 21 பணப்பரிமாற்றத்தில் ஒரு பணப்பரிமாற்றம் குறித்து சரியாக விளக்கம் அளிக்கப்பட்டால், அது மற்றவைகளும் உண்மையானதாகவே இருக்க வேண்டும் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

இது குறித்து அறியாத மருத்துவர், முதலில் விளக்கம் அளித்திருந்தால், பிறகு அவர் தனது விளக்கத்தை மாற்றியிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்

மருத்துவரின் இந்த இரு வேறு கருத்துகளால் மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவற்றுக்கு விளக்கம் அளிக்கப்போவது யார்?

நிகழ்வின் பின்னணி:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் விண்ணப்பத்தில், கட்சியின் பொதுச் செயலர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பதிவு செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தினர்.

ஆனால், ஜெயலலிதா சுய நினைவோடுதான் இருக்கிறார். அவரது கையில் மருந்துகள் செலுத்தப்படுவதால் கையெழுத்துப் போடுவது சிரமம் என்பதாலேயே கைரேகை பதிவு செய்யப்பட்டதாக சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி கூறியிருந்தார். இதனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது சிக்கிய ஆவணங்களில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கிக் கணக்கு விவரம் இடம்பெற்றிருந்தது. அதாவது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, ஒரு வங்கிக் கணக்கில் நடந்த 21 பணப்பரிமாற்ற விவரங்கள் குறித்த பட்டியல் அது.

அந்த பட்டியலில், நவம்பர் 1ம் தேதி டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பட்டியலின் அடிப்படையில், ஜெயலலிதாவின் கைரேகை பெற பாலாஜிக்கு 5 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சமூக வளைதலங்களிலும், வாட்ஸ்-அப்பிலும் தகவல் பரவியது.

இதனை மறுத்துள்ள டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான கட்டணம்தான் ரூ.5 லட்சம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அவர் லண்டனில் இருந்து 4 முறை சென்னை வந்தார். அவரை சென்னையில் உள்ள ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்குமாறு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியும், அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலேயே 4 முறையும் தங்கினார்.

அவர் நவம்பர் 2ம் தேதி லண்டன் புறப்பட இருந்ததால், முன்கூட்டியே ஹோட்டல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையில், அவரது ஹோட்டல் கட்டணத்தை அப்பல்லோ நிர்வாகம் செலுத்த முடியாது என்று கூறிவிட்டது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சொன்னதும், அவர் தான் ஹோட்டல் கட்டணத்தை காசோலை மூலம் கொடுத்தனுப்பினார். ஹோட்டல் கட்டணம் செலுத்தப்பட்டு, மீதத் தொகையைக் கூட அவரது உதவியாளரிடம் கொடுத்தனுப்பிவிட்டேன்.

ஆனால், ஜெயலலிதாவிடம் கைரேகை பெற எனக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக புரளி பரவியுள்ளது. அவ்வாறு எந்த பணத்தையும் நான் வாங்கவில்லை. அதில் உண்மையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, இந்த பட்டியலில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு செய்தியாளர்களுக்கும் பணம் வழங்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மற்றும் அந்த இரண்டு செய்தியாளர்களுக்கு வருமான வரித்துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.