ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா புகார்: தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் - எச்.ராஜா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எழுந்த பணப் பட்டுவாடா புகாரை தொடர்ந்து, தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்றார் பாஜக தேசிய
நாகர்கோவில்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எழுந்த பணப் பட்டுவாடா புகாரை தொடர்ந்து, தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்றார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஆர்.கே.நகரில் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுவும் பணம் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.
நிகழாண்டில் பயிர்க் கடனுக்காக மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி அறிவித்தது. ஒரு மாநிலத்துக்கு என பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகள்தான் பயிர்க் கடனை ரத்து செய்திருக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு தடுப்பணையைக் கூட திராவிட கட்சிகள் கட்டவில்லை. தமிழக விவசாயிகளை சுரண்டி மணலை கொள்ளை அடித்த மோசடிக்கு எதிராகப் போராடாமல் யாருடைய துண்டுதலின் பேரிலோ விவசாயிகள் தில்லியில் போய் போராடுகிறார்கள். உண்மையில் விவசாயிகள் போராட வேண்டியது தமிழக அரசை எதிர்த்துதான் என்றார் அவர்.