தமிழ்நாடு

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது

DIN

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு 'மனோன்மணியம் சுந்தரனார் விருது' புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு என பல தளங்களில் பங்களிப்பு செய்த பெருந்தகைகளுக்கு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ள சுந்தரனார் அறக்கட்டளையின் சார்பில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, முதலில் பேராசிரியர் இளைய பெருமாள், பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு 2014-15ஆம் ஆண்டுக்கு பிரித்து வழங்கப்பட்டது. பின்னர், 2015-16ஆம் ஆண்டுக்கு தமிழறிஞர் ச.வே.சு. என்கிற ச.வே. சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது. 2016-17ஆம் ஆண்டுக்கான விருது கி. ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தில் 1923ஆம் ஆண்டில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர், கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கியதால், புதுச்சேரி பல்கலைக்கழகமானது வருகைதரு பேராசிரியராக இவரை அழைத்து, நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து ஆவணப்படுத்தும் மையத்தின் இயக்குநர் பொறுப்பை வழங்கியது. அன்று தொடங்கி இன்று வரை புதுச்சேரியிலேயே வசித்து வருகிறார். இவரது முதல் சிறுகதை தொகுதி 1965ஆம் ஆண்டில் அச்சானது. வட்டார வழக்கு மொழிகளுக்கு சொல் அகராதி வெளியிட்ட பெருமையும் இவரையே சேரும். 1965இல் 'கதவு' என்ற கதை தொகுப்பில் தொடங்கி 2017இல் வெளியான 'கதைசொல்லி' வரையில் 55 நூல்களை அளித்துள்ளார். இவருக்கு விருது வழங்கும் விழா, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து துணை வேந்தர் கி. பாஸ்கர் பேசியது: உலக இலக்கியம் என்பது ஆங்கிலத்தில் எழுதப்படுபவை அல்ல. ஒவ்வொரு வட்டாரத்து மனிதர்களின் நிகழ்காலப் பிர்சனைகளுக்குப் பின்னால் இருக்கும் இயங்கியலையும், தன்னிலை இருப்பின் சிக்கலையும், தேடல்களையும் அவரவர் மொழியில் எழுதுவது உலக இலக்கியத்தின் அடிப்படை. இந்த அடிப்படையிலேயே உலகின் மதிப்புமிக்க விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதே அடிப்படையில் தமிழில் இருந்து நோபல் விருதுக்கு பரிந்துரை செய்யத்தக்க எழுத்தாளராக விளங்கும் கி. ராஜநாராயணனுக்கு, பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை பெயரில் அமைந்துள்ள உயரிய விருதை வழங்குவதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் பெருமிதம் கொள்கிறது என்றார். உடல்நலக் குறைவு காரணமாக விருது பெற ராஜநாராயணன் நேரில் வரவில்லை. அவரது மகன் ஆர். பிரபாகரன் வந்திருந்தார். அவரிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, விருது, பட்டயச் சான்று ஆகியவற்றை பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்.
தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் க. பாஸ்கரன், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன், சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் அ. ஜான் டி பிரிட்டோ, தமிழியல் துறைத் தலைவர் அ. ராமசாமி, பேராசிரியர் ஞா. ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT