அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம்: அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக பொதுச்செயலாளர், சசிகலா, துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர், சசிகலா, துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதைக் எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டதோடு ஆவணங்களையும் சமர்ப்பிக்க கூறியது.
இதைத்தொடர்ந்து ஆவணங்களை சரிபார்க்க அவகாசம் கோரிய தேர்தல் ஆணையம், ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.3 கோடி புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், "அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தான் ரூ.1.3 கோடியை கொடுத்தார். இதற்காக நாங்கள் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் பல முறை அவருக்கு வேண்டியவர்களை சந்தித்துப் பேசினோம்' என்று கூறியதாக தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து தில்லிக்கு வரவழைத்து கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்திய தில்லி போலீஸார், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.
பின்னர் புதன்கிழமை பிற்பகலில் தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேநேரத்தில், அவரிடம் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தில்லி போலீஸார் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தினகரனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன், பின்பு பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க சென்னையிலிருந்து கொச்சி வழியாக தில்லிக்கு ரூ.10 கோடியை நரேஷ் அனுப்பியதாக தகவல் வெளியானது இதற்கு தரகராக இருந்து செயல்பட்டவர் நரேஷ் என்பது போலீஸாருக்கு தெரியவந்ததது.
இதையடுத்து போலீஸார் அவரை தேடி வந்த நிலையில், தாய்லாந்திலிருந்து தில்லி வந்த ஹாவாலா ஏஜென்ட் நரேஷை தில்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
தில்லியைச் சேர்ந்த நரேஷூக்கும் டிடிவி தினகரனுக்கும் நேரடித் தொடர்பு இருந்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நரேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுகளால் அவர்களது தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், கட்சிப் பொறுப்புகளில் சசிகலாவும் டிடிவி தினகரனும் நீடிப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலா, டிடிவி தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தனக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களால் தனக்கு விளம்பரம்தான் கிடைக்கும் என்ற ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை ஆதம்பாக்கம் வந்த தில்லி காவல்துறையினர் மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி மோகன் என்பவருக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் தில்லி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.