தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச அட்டவணை: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல்!

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச அட்டவணையை உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்டு 31 -ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுக்கும் விதமாக, தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'தனி நீதிபதி என்.கிருபாகரன் விதித்துள்ள நிபந்தனைகளை அமல்படுத்த வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த விதிமுறைகளை முதலில் அமல்படுத்த வேண்டும். பின்னர், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் இருந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்பது வரையிலான பணிகளை நடத்தி முடிக்க 50 நாட்கள் தேவைப்படும்' என வாதிட்டார்.

இதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை தமிழக அரசு நினைத்தால், ஒரே நாளில் அமல்படுத்த முடியும். ஆனால், இந்தத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறார்கள்' எனக் கூறினார்.

இந்த வழக்கில், மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், '2001 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும், 1991 -ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி வரையறையின் அடிப்படையிலும் தற்போது தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. இதை ஏற்க முடியாது. 2011 - ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள், பதவிகளை வரையறை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார். இதேபோல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 'இந்த வழக்கை வரும் ஆகஸ்டு 1 - ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம், உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணையை மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.

அதன்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தேச அட்டவணையை உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT