முகப்பு
தமிழ்நாடு

டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்தவே கட்சி பதவியை ஏற்கிறேன்: ஏ.கே.போஸ்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்துவதற்காகவே கட்சிப் பதவியை ஏற்பதாக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்துவதற்காகவே கட்சிப் பதவியை ஏற்பதாக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவில் பதவி பெறுவது மிக கடினம். எனக்கு மாநில விவசாயப் பிரிவு இணைச் செயலர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால், அந்த பதவியை ஏற்க முடியாத நிலையில் இருந்தேன். தற்போது உடல் நிலை சீராகி வருகிறது. எனவே, டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படும் விதமாக அவர் கொடுத்த பதவியை ஏற்க உள்ளேன். இதுதொடர்பாக வரும் 10ஆம் தேதி அவரை சந்தித்து விளக்கமளிக்க உள்ளேன்.
மக்களவைத் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தவும், கட்சியினரை ஒன்றிணைக்கவும் டி.டி.வி. தினகரன் பாடுபடுகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்.
வரும் 14-ஆம் தேதி மேலூரில் தினகரன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளோம். அதற்கான பணிகளை செய்து வருகின்றேன்.
அதேவேளையில் கட்சியின் பொதுச்செயலர் சசிகலா கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆட்சியை வழிநடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கட்சியை வழிநடத்த டி.டிவி. தினகரன் தலைமையிலும் செயல்படுவோம் என்றார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலர் கே. கருத்தக்கண்ணன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →