ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது
எங்கள் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது; சூழ்ச்சியாளர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
எங்கள் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது; சூழ்ச்சியாளர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடியில் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் எம்ஜிஆரின் உருவப்படத்தைத் திறந்துவைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், 41 ஆயிரம் பேருக்கு ரூ.784 கோடியே 47 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
எம்ஜிஆர் அரசியல், கலை, முதல்வர் என பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார். அவரது வரலாற்றை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், காளமேகப் புலவர், செஞ்சி தேசிங்கு ராஜா, கோப்பெருஞ்சோழன், பாரி வள்ளல் மற்றும் சான்றோர்கள் வாழ்ந்த பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திகழ்கிறது.
இங்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவது பெருமைக்குரியதாகும்.
தென்னாற்காடு மாவட்டமாக இருந்ததை, 1993-இல் விழுப்புரம் மாவட்டமாக தனியாக பிரித்து பெருமை சேர்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தின் மாபெரும் சக்தியாக விளங்கியவர்களின் சரித்திரம் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது.
மாணவர்கள் ஒழுக்கம், மரியாதை, தர்மம் போன்றவற்றை கற்று நடப்பதே இந்த விழாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும். இனி எம்ஜிஆரைப் போல பிறந்து சாதிப்பவர் அரிது. அவர் முதல்வரானதும், ஏழைகள் குறித்த கணக்கெடுப்பைக் கேட்டு திட்டங்களைத் தீட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஏழைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக செயல்பட்டார்.
இதைப் பின்பற்றி வரும் எனது தலைமையிலான அரசும் மக்கள் தேவையை நிறைவு செய்து வருகிறது. மாநிலத்தின் முன்னேற்றமே இந்த அரசின் குறிக்கோளாகும். ஜெயலலிதா வழியில் பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வேலையைக் கைவிட்டு அவர்கள் மக்கள் பணி செய்ய வேண்டும்.
இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பலர் பேசி வருவதாக அமைச்சர்கள் கூறினர். அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து செயல்படும் இந்த மக்களாட்சி ஒருபோதும் கவிழாது என்றார் முதல்வர்.
விழாவுக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகித்தார். மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார்.
மரக்காணத்தில் ரூ.1,000 கோடியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்
விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், மரக்காணத்தில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இதன் மூலம் தினமும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் சொன்ன குட்டிக்கதை
நாட்டில் நடப்பதைப் போல, காட்டிலும் தேர்தல் நடத்த விலங்குகள் நினைத்தன.
சிங்கத்தை வீழ்த்த நினைத்த புலியொன்று, தந்திரமாக நரியை அழைத்து, சிங்கத்தின் மாமிசத்தை கொண்டு வந்தால், உன்னை காட்டுக்கு ராஜாவாக ஆக்குவேன் என்றதாம்.
இதை நம்பிச் சென்ற நரி, அதுவும் ஒரு தந்திரம் செய்து, யானையை அழைத்து, சிங்கத்தைக் கொன்றுவிட்டால் நீதான் காட்டுக்கு ராஜா என்றது. மேலும், யானை கொல்ல வருவதாக, சிங்கத்திடமும் நரி சொல்லியது. இதனால், ஆத்திரமடைந்த சிங்கம், யானையை அழைத்து விசாரித்தபோது, நரியின் சூழ்ச்சி வெளிப்பட்டது. சிங்கம் நரியைத் தாக்கி துரத்தியது.
இதுபோலவே, பலரும் சூழ்ச்சி செய்கின்றனர். அவர்களது சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே அணியாக இணைந்து சூழ்ச்சியை வீழ்த்துவோம் என்றார்.