நடுக்கடலில் தத்தளிக்கும் அந்தமான் கப்பல். 
தமிழ்நாடு

கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளிக்கும் அந்தமான் கப்பல்கள்

கொந்தளிக்கும் கடல் அலையில் சிக்கி, தொடர்ந்து பழுதாகித் தத்தளிக்கும் அந்தமான் கப்பல்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

முகவை க.சிவக்குமார்


பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி * அதிகரிக்கும் விமானப் பயணங்கள்

கொந்தளிக்கும் கடல் அலையில் சிக்கி, தொடர்ந்து பழுதாகித் தத்தளிக்கும் அந்தமான் கப்பல்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அந்தமான் நிகோபர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. போர்ட்பிளேயரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இதன் நிர்வாகத்தின் கீழ் சுமார் 71 கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள், மிதவைக் கப்பல்கள், வாகனங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் என பல்வகை கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டனம்-போர்ட்பிளேயர் பயணிகள் கப்பல் போக்குவரத்து: அந்தமானில் இருந்து சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகிய 3 இடங்களுக்கும் சுமார் 1200 பயணிகள் செல்லும் வசதி கொண்ட 5 கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 'எம்.வி.ஸ்வரஸ்தீப்', 'எம்.வி. நன்கவுரி' ஆகிய கப்பல்கள் சென்னை-போர்ட் பிளேயர் நகரங்கள் இடையேயும், 'எம்.வி.ஹர்சவர்தன்', 'எம்.வி.அக்பர்' ஆகிய கப்பல்கள் கொல்கத்தா-போர்ட்பிளேயர் இடையேயும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயணத்திற்கான அறிவிப்புகளை அவ்வப்போது இயக்குநரகம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக பயணிகள் கப்பல், நடுக்கடலில் செல்லும் போது பழுதடைவதும், கப்பலின் புறப்பாடு உள்ளிட்டவை அடிக்கடி மாற்றப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் பலர் கப்பல் பயணத்தையே தவிர்க்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அடிக்கடி பழுதுதாகும் கப்பல்கள்: கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பயணிகளுடன் போர்ட் பிளேயரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட 'எம்.வி.ஸ்வரஸ்தீப்' என்ற கப்பல் கடல் சீற்றத்தில் சிக்கி இயந்திரம் பழுதடைந்தது.
இதனையடுத்து மாற்று இயந்திரம் மூலம் கப்பல் மெதுவாக இயக்கப்பட்டு சுமார் 2 நாள் தாமதமாக சென்னைக்கு வந்தடைந்தது. இதனையடுத்து இங்கிருந்து செல்ல வேண்டிய அந்தக் கப்பலின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தமான் செல்வதற்காக டிக்கெட் பதிவு செய்திருந்த பயணிகள் தங்கள் பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இக்கப்பல் முழுமையாகப் பழுது நீக்கப்படாததால் மீண்டும் பயணிக்க கடல்சார் கடல் வணிகத் துறை அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 'எம்.வி.நன்கவுரி' என்ற ஒரு கப்பல் மட்டுமே இயக்கப்படும் நிலை உள்ளது.
இதேபோல் கொல்கத்தா மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்த இரு கப்பல்களில் 'எம்.வி. அக்பர்' சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'மெயின்லேண்டு' என்றழைக்கப்படும் இந்தியப் பகுதிகளிலிருந்து தற்போது மூன்று கப்பல்கள்தான் இயக்கப்பட்டு வருகின்றன.
கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்: அந்தமான் நிர்வாகத்திற்குச் சொந்தமான 'டி.டி.பேந்தர்' என்ற சரக்குக் கப்பல் கடந்த ஜூலை 15-ஆம் தேதி சுமார் 500 டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போர்ட் பிளேயருக்கு புறப்பட்டுச் சென்றது. ஜூலை 20-ம் தேதி போர்ட்பிளேயரிலிருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது சீற்றத்தால் தள்ளாடிய இக்கப்பல் சிறிது சிறிதாக கடலில் மூழ்கத் தொடங்கியது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று அந்தக் கப்பலின் ஊழியர்கள் சுமார் 11 பேரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இதுபோல் அந்தமான் கப்பல்கள் அடிக்கடி பழுதடைவதற்கு முறையாக பராமரிப்பின்மையே காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கும் அந்தமானுக்குமான தொடர்பு சுதந்திர இந்தியாவிற்கும் முந்தையது. பல தலைமுறைகளைக் கடந்து விட்ட குடும்பங்களின் தொப்புள் கொடி உறவாக இந்தக் கப்பல் போக்குவரத்துதான் இருந்து வருகிறது.
எனவே இந்த கடல் பயணங்கள் தொடர்ந்து நடைபெற அந்தமான் அரசு மட்டுமின்றி தமிழகம் மற்றும் மத்திய அரசின் கவனம் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
கப்பல் பயணத்தை தவிர்க்கும் பயணிகள்
தற்போது கப்பலில் 'பங்க்' எனப்படும் பிரிவில் செல்ல அந்தமானைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 1,100, பிற இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு - ரூ.2,350-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர 'டீலக்ஸ்'- ரூ.12,500, முதல் வகுப்புக்கு -ரூ 8,500, இரண்டாம் வகுப்புக்கு -ரூ.5000 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அந்தமானைச் சேர்ந்தவர்கள் என்றால் பாதியளவுக்குக் கட்டணம் இருக்கும். கப்பல் பயணத்தில் சுமார் 56 மணி நேரம் பயணிக்க வேண்டும். மேலும் சாப்பாட்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
அக்டோபர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சீசன் காலம். தற்போது சீசன் இல்லாததால் விமானக் கட்டணங்கள் ஒரு வழிப் பயணத்திற்கு ரூ. 4,350-வரை குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. மேலும் 2 மணி நேரத்தில் போர்ட்பிளேயர் சென்று இறங்கி விடலாம். மேலும் தற்போது தினமும் 5 விமானங்கள் இருவழியிலும் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. இதேபோல் கொல்கத்தாவிலிருந்தும் விமானப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக கட்டணம், அதிகமான பயண நேரம், நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்கள் என கப்பல் பயணமே போரடிப்பதால் கப்பலில் சென்று வந்த பயணிகள் விமானத்திற்கு இடம் பெயரத் தொடங்கிவிட்டனர். கடந்த முறை சென்னை வந்த கப்பலில் இரு நூறுக்கும் குறைவான பயணிகள் பயணித்ததே இதற்கு சாட்சியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT