முகப்பு
தமிழ்நாடு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதி முன் புதுவை அதிமுகவினர் போராட்டம்

புதுச்சேரியில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதி முன் புதுவை மாநில அதிமுகவினர் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
சின்னவீராம்பட்டினத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதி முன் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமையில் போராட்டம் நடத்திய அதிமுகவினர்.
பகிர்:

புதுச்சேரியில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதி முன் புதுவை மாநில அதிமுகவினர் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிகள் இணைந்தன. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்கு டிடிவி தினகரன் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கூறி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். பின்னர், பாதுகாப்பு கருதி அனைவரும் புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதியில் தங்கியுள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் இதுவரை வெளியே வரவில்லை. அங்கேயே உணவு உண்டு, நடைபயிற்சி மேற்கொண்டு பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இதற்கிடையே, புதுவை மாநில அதிமுகவினர் ஓம் சக்தி சேகர், புருஷோத்தமன் தலைமையில் தனியார் சொகுசு விடுதி முன் புதன்கிழமை குவிந்தனர்.
உள்ளே தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களுடன் வந்து இணைய வேண்டும் என முழக்கமிட்டனர். சசிகலா, தினகரனுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் திடீரென தினகரன் உருவபொம்மையை எரித்தனர். பின்னர், விடுதிக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் தடுப்புகளை வைத்து அவர்களைத் தடுத்ததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கூறியதாவது:
தினகரன், சசிகலாவுடன் சென்றால் சிறை நிச்சயம். நிரந்தரப் பொதுச் செயலர் ஜெயலலிதாதான். பணம் கொடுத்துதான் எம்.எல்.ஏ.க்களை தினகரன் அழைத்து வந்து அடைத்து வைத்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் விலை போகக்கூடாது. எம்.எல்.ஏ.க்களிடம் பேசினேன். அவர்கள் விரைவில் வெளியே வருவதாகத் தெரிவித்தனர். எங்களுக்கு எம்.எல்.ஏக்கள் யாரும் எதிரிகள் அல்ல.
அதிமுகவை பிளவுபடுத்த புதுவை காங்கிரஸ் அரசு நினைக்கிறது. அதனால் மௌனம் காக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர், ஐஜி ஆகியோரிடம் மனு தர உள்ளேன்.
தினகரன் வந்தால் எங்கள் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →