கொறடா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்: 'தடாலடி' தங்க தமிழ்ச்செல்வன்!
எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்திருக்கும் கொறடா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று அதிமுக எம்.எல்.வான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்திருக்கும் கொறடா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று அதிமுக எம்.எல்.வான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் சில நாட்களுக்கு முன்பு இணைந்தன. ஓ.பபன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுகவின் வழிகாட்டுக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் போர்க்குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் அணி திரண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழத்தின் பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை என்றும், முதல்வரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்தனர்.
தற்பொழுது அவர்கள் அனைவரும் புதுச்சேரியினை அடுத்துள்ள சின்ன வீராம்பாளையம் என்னும் இடத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக அம்மா அணி ஆதரவு எம்.எல்.ஏவான தங்க தமிழ்ச்செல்வன் இன்று தாங்கள் தங்கியுள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கொறடா பரிந்துரை செய்திருப்பது சட்டவிரோதம். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். நாங்கள் அனைவரும் எங்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக சரியான பாதையில் செல்கிறோம் அவ்வளவுதான். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எங்கள் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை.
எங்கள் மீது இன்று நடவடிக்கை எடுக்க நினைப்பவர்கள், சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது திமுகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, கொறடா உத்தரவுக்கு மாறாக அரசுக்கு எதிராக வாக்களித்தவரும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தவருமான ஓ,பன்னீர்செல்வத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
தற்பொழுது நாங்கள் நினைத்தால் அவரை பதவி நீக்கம் செய்யய முடியும். அவரால் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை. இது ஜனநாயக நாடு. எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.