சசிகலாவை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தினால் வன்முறை வெடிக்கும்: எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி பேட்டி
சசிகலாவை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தினால் வன்முறை வெடிக்கும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி
புதுச்சேரி: சசிகலாவை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தினால் வன்முறை வெடிக்கும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து கடந்த சில மாதங்களாக பிரிந்திருந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் கடந்த வாரம் திங்கள்கிழமை(அக 21) சென்னையில் ஆதிகாரப்பூர்வமாக இணைந்தன.
இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுகிறோம் என்று தனித்தனியாக கடிதம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் தினகரனுடன் ஆலோசனை நடத்திவிட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்து தினமும் அறிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பரபரப்பான் அரசியல் சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 28 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். இதற்காக, தனித்தனியாக கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. தொலைபேசி மூலம் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கட்சியில் நியமிக்கப்படவுள்ள வழிகாட்டு குழுவுக்கும் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி முதல்வர் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், சசிகலாவை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தினால் தலைமை அலுவலகத்தில் வன்முறை வெடிக்கும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏ இவ்வாறு கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.