முகப்பு
தமிழ்நாடு

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய முறை

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை எளிதாக இணைப்பதற்கு இரு புதிய முறைகளை இந்திய தொலைத் தொடர்புத் துறை அறிமுகப்படுத்த உள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை எளிதாக இணைப்பதற்கு இரு புதிய முறைகளை இந்திய தொலைத் தொடர்புத் துறை அறிமுகப்படுத்த உள்ளது. 
அரசின் நலத் திட்டங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், மற்ற சேவைகள் பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வங்கிக் கணக்கு, தபால் சேமிப்புக் கணக்கு உள்பட பல்வேறு சேவை திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் டிசம்பருக்குள் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை 2018 பிப். 6-ஆம் தேதிக்குள் இணைக்கவும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
செல்லிடப்பேசி மூலம் பல்வேறு சேவைகள் வழங்கி வரும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதாரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆதார் எண்ணை இணைக்க அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 
செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு: பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் கடந்த 4 மாதமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னை தொலைபேசி வட்டத்தில் 12 லட்சம் செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 4 லட்சம் பேரின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வட்டத்தில் 75 லட்சம் சந்தாதாரர்களில் 29 லட்சம் சந்தாதாரர்களின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. 
இரண்டு புதிய முறைகள்: செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இரு புதிய முறைகளை இந்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறையில் எளிதாக வீட்டில் இருந்தபடியே செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியும். 
இதுகுறித்து பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி வட்ட அதிகாரிகள் கூறியது:
இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்லிடப்பேசி செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையைப் பெற ஏற்கெனவே ஆதார் பதிவு செய்து இருக்க வேண்டும். ஆதார் பதிவு செய்யும் போது, ஏதாவது ஒரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் செல்லிடப்பேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும். 
இணையதளம் வாயிலாக (ல்ர்ழ்ற்ஹப்.க்ஷள்ய்ஸாப்.ண்ய்) பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு ஆதார் பதிவு செய்யும் போது, கொடுத்திருந்த செல்லிடப் பேசி எண்ணை குறிப்பிட வேண்டும். அதைத் தொடர்ந்து 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், ஓடிபி எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் செல்லிடப்பேசிக்கு வரும். அந்த எண்ணைப் பதிந்து, ஏற்கெனவே ஆதார் அட்டை பெறும்போது பதிவு செய்திருந்த செல்லிடப்பேசி எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து மீண்டும் ஒரு ஓடிபி எண் வரும்.
அதை பிஎஸ்என்எல் இணையதளத்தில் பதிந்ததும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும். இதற்கான குறுந்தகவலும் அனுப்பி வைக்கப்படும்.
செல்போன் அழைப்பு மூலம்: இதுதவிர ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
"1507' என்ற எண்ணுக்கு டயல் செய்து, ஆதார் எண், ஆதார் பதிவின்போது, கொடுத்த செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். அதையடுத்து, ஓடிபி எண் வரும். அந்த எண்ணை பதிவு செய்யும்போது, மற்றொரு ஒரு ரகசிய எண் கிடைக்கும். அதைக் குறிப்பிட்டதும் ஆதாருடன் இணைக்கப்பட்டதற்கான தகவல் வந்துவிடும்.
சிரமத்தைத் தவிர்க்கலாம்: மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைப்பதில் சிரமம் உள்ளது. அதைத் தீர்க்க இந்த முறைகள் உதவும். நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் இந்த முறையில் எளிதாக செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியும்.
மற்ற நிறுவனங்களிடம் இச்சேவை: அதேபோல, மற்ற எல்லா தொலைபேசி சேவை நிறுவனங்களும் அவர்களின் இணையதளம் வாயிலாக இந்த முறையை பின்பற்றி, இணைக்காத சந்தாதாரர்கள் ஆதாரை இணைக்க முடியும் என்றார் அவர். 
இந்திய தொலைத் தொடர்பு வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. 
உலகில் செல்லிடப்பேசி அதிகம் பயன்படுத்துவோரில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2012-ஆம் ஆண்டு மே மாதம் கணக்கின்படி, 92 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் பேர் செல்லிடப்பேசி பயன்படுத்தி வந்தனர். 
தற்போது, இதன் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.