தமிழ்நாடு

கல்லூரி அனுமதி புதுப்பிப்பு: பேராசிரியர்களின் ஆதார் அட்டையும் அவசியம்- அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

DIN

பொறியியல் கல்லூரிகளின் அனுமதி மற்றும் இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க நடத்தப்படும் களஆய்வின் போது, அந்தக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஆதார் அட்டையையும் உடன் சமர்ப்பிப்பது அவசியம் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில், பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளும்போது, பணிபுரியும் பேராசிரியர்களின் சான்றிதழ்களோடு, ஆதார் அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக கணக்கு காண்பிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்தப் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அந்தஸ்தை புதுப்பித்துகொள்ள வேண்டும்.
இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின்போது பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள், ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அதுபோல, 2018-19 கல்வியாண்டுக்கு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி மற்றும் இணைப்பு அந்தஸ்தை புதுப்பிப்பதற்கான நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்திடம் ஆன்-லைனில் சமர்ப்பிக்க ஜனவரி 5 கடைசி நாள் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, கல்லூரி ஆய்வின்போது, பேராசிரியர்களின் சான்றிதழ்களோடு, அவர்களின் ஆதார் அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் மற்றும் கல்லூரி இணைப்பு அந்தஸ்து வழங்கும் மைய இயக்குநர் மதுசூதனன் ஆகியோர் கூறியது:
ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி பொறியியல் கல்லூரிகளில் 1:15 என்ற அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதம் இருக்க வேண்டும். ஆனால், சில பொறியியல் கல்லூரிகள் இந்த எண்ணிக்கையை முறையாக பின்பற்றவில்லை எனவும், பல்கலைக்கழக ஆய்வின்போது ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு கணக்கு காட்டுவதாகவும் தொடர் புகார்கள் வருகின்றன.
இதைத் தடுக்க, பல்கலைக்கழக ஆய்வின்போது, பேராசிரியர்களின் சான்றிதழ்களோடு, பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிறகும் இந்த முறைகேடுகள் தொடர்வதாக புகார்கள் வருகின்றன.
எனவே, இதை முழுமையாகக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழக ஆய்வின்போது பேராசிரியர்களின் சான்றிதழ்களோடு, தகுதியான ஆதார் அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின்போது, பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் பணியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT