தமிழ்நாடு

மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்ட அரசாணை ரத்து

DIN

மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக பணிபுரிந்த டாக்டர் கீதாலட்சுமி 2015-இல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி டீனாக இருந்த ஆர்.விமலா, மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை ரத்து செய்து அனைத்து தகுதிகளும் உள்ள தன்னை இயக்குநராக நியமிக்கக்கோரி கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் எஸ்.ரேவதி கயிலைராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் தகுதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. இருப்பினும் அப்பதவியில் இருந்து விமலா ஓய்வு பெற்றதால் மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது எனக்கூறி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனை டீனாக இருந்த எட்வின்ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து ரேவதி கயிலைராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எட்வின்ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக தொடர இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி எம்.வேணுகோபால், ஜெ.அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு இறுதி உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. அதன் விபரம்:
மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் தகுதி அடிப்படையில் நடைபெறவில்லை. மருத்துவக் கல்வி இயக்குநருக்காக தயாரிக்கப்பட்ட பட்டியலில் பணி மூப்பின்படி ரேவதி கயிலைராஜன் மூத்தவராய் இருப்பினும், தகுதி அடிப்படையில் எனக் காரணம் கூறி எட்வின்ஜோவின் பெயர், பட்டியலின் முதலிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்வின்ஜோ நியமனம் தொடர்பான அரசாணையில் கருப்பு மையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை நீதிமன்றத்துக்கு சந்தேகத்தை கிளப்பும் வகையில் உள்ளது. எனவே மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோவின் நியமிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. 
அதேநேரத்தில், வழக்கில் மேல்முறையீடு செய்த ரேவதி கயிலைராஜன் 2018 பிப்ரவரி மாதம் ஓய்வு பெற உள்ளார். எனவே அவரை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமித்து உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு சட்டத்தின் பார்வையில் தவறானது. இதன்படி தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
எனவே பணி மூப்பு, தகுதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்கு உரிய நபர்களின் பட்டியலை தயாரித்து தகுதியான நபரை நியமிக்க சுகாதாரத்துறைச் செயலர் ஆறு வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT