தமிழ்நாடு

தெற்கு ரயில்வேயில் அமலுக்கு வந்தது பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை !

தெற்கு ரயில்வேயில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு 'பயோ மெட்ரிக்' (விரல் ரேகை) வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வந்தது.

ஆர்.ஜி. ஜெகதீஷ்

தெற்கு ரயில்வேயில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு 'பயோ மெட்ரிக்' (விரல் ரேகை) வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வந்தது.

'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறை இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு தொழிற் சங்கங்கள் இந்த முறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்த வருகை பதிவேடு முறை நவம்பர் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். 

'பயோ மெட்ரிக்' முறை மூலம் ரயில்வே தொழிலாளர்கள், ஊழியர்களைத் தண்டிக்கவும் வாய்ப்புள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஊழியர்கள் தங்களின் வருகைப் பதிவை விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் முறை, உள்துறை அமைச்சகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 'பயோ மெட்ரிக்' அடையாள முறை இந்திய ரயில்வேயில் உள்ள அலுவலகங்களிலும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரூ.4.4 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த அலுவலகங்களில் இவற்றை அமல்படுத்துவது என்பதை மண்டல ரயில்வே முடிவு செய்யும். பின்னர் இந்த முறை, அனைத்து உற்பத்தி மையங்களுக்கும் நீட்டிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.

எதனால் பயோ மெட்ரிக்?: நேரம் தவறாமையை ஒவ்வொரு ஊழியரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊழியர்கள் பலர் அலுவலகங்களுக்குத் தொடர்ந்து தாமதமாக வருவதை, வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்வே அலுவலகங்களில், உயரதிகாரிகளில் இருந்து, சாதாரண ஊழியர்கள் வரை, வருகைப் பதிவு குறித்த விஷயத்தில், நேரம் தவறாமையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பணிக்கு வரும் ஊழியர்கள், அதிகாரிகள் குறித்த நேரத்திற்கு அலுவலகம் வருவதை, ரயில்வே அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார் அந்த அதிகாரி. 

ஆதார் எண் அடிப்படை: ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, 'பயோ மெட்ரிக்' தொழில்நுட்பம் மூலம், ஊழியர்கள் வருகையைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ரயில்வேயில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்போது, வருகைப் பதிவேட்டு புத்தகத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கையெழுத்திடுவதன் மூலம், வருகைப் பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்கு பதிலாக, பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். 

வருகைப் பதிவேடு இணையதளம்: ஊழியர்களின் அன்றாட வருகைப் பதிவேட்டை, அனைவரும் காணும் வகையில், www.attendance.gov.in என்ற இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பயோ மெட்ரிக் முறையில் 1.30 லட்சம் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டு விவரம் இடம் பெறும்.

இப்போதுள்ள நடைமுறைப்படி, மத்திய அரசு ஊழியர், ஒரு மாதத்துக்கு, இருமுறை மட்டும், அலுவலகத்துக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம். இதற்கு மேல் தாமதமாக வந்தால், அந்த ஊழியருக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையில், அரை நாள் கழிக்கப்படும். நியாயமான காரணங்களுக்காக தாமதமாக வர நேரிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சலுகை அளிக்கும் பொறுப்பு, அவர்களின் உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் வடக்கு ரயில்வே, வட மத்திய ரயில்வே, வடக்கு கிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 11 ரயில்வேக்களிலும் இந்த முறையைச் செயல்படுத்த மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் முனைப்புக்காட்டி இதை செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இதைக் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் தில்லியில் ஒருங்கிணைந்து ஊழியர்கள் வருகைப் பதிவேடு கண்காணிக்கப்படும். இதற்கான மென்பொருள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. மேலும், ரயில்வே ஊழியர்கள் தாமதமாக வந்தால் யாரோ ஒருவர் தில்லியில் இருந்து கண்காணிப்பதையும், நடவடிக்கை எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. மேலும், இந்த நடைமுறையால் ஆள்குறைப்பு நடவடிக்கையும் ரயில்வே அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT