முகப்பு
தமிழ்நாடு

சம்பாப் பயிரைக் காப்பாற்ற காவிரியில் கூடுதல் நீரை திறந்து விட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சம்பாப் பயிரைக் காப்பாற்ற காவிரியில் கூடுதல் நீரை திறந்து விட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

சம்பாப் பயிரைக் காப்பாற்ற காவிரியில் கூடுதல் நீரை திறந்து விட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பாப் பருவ நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாததால் வாடத் தொடங்கியுள்ளன. நெற்பயிர்கள் கருகாமல் தடுக்க காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அதை அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப் படுவது வழக்கமாகும். அவ்வாறு தண்ணீர் திறந்து விடப்பட்டால் அதைக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் முப்போகம் சாகுபடி செய்வார்கள். ஆனால், காவிரியில் தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்காததாலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததாலும் நடப்பாண்டில் மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் ஓரளவு தண்ணீர் சேர்ந்த பிறகு கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி காவிரியில் நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பா பயிரையாவது செய்யலாம் என்ற நோக்கத்துடன் காவிரி பாசன மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டிருக்கிறது.

சம்பா பயிர்கள் இப்போது கதிர் விடும் பருவத்தில் உள்ளன. இந்த நேரத்தில் தடையின்றி தொடர்ந்து தண்ணீர் விடுவதன் மூலம் தான் பயிர் செழித்து கூடுதல் மகசூலை ஈட்டித் தரும். ஆனால், நல்வாய்ப்புக் கேடாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதைக் காரணம் காட்டி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.20 அடியாக, அதாவது 31.25 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது. அணைக்கான நீர் வரத்தும் 215 கனஅடியாக குறைந்து விட்டது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 7000 கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 900 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டதால் காவிரி பாசன விவசாயிகள் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சம்பா பருவப் பயிர்களுக்கு இந்த நேரத்தில் தான் கூடுதலாக தண்ணீர் தேவைப்படும். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் இருந்தே காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்ததால் அதைக் கொண்டு தான் சம்பா நெற்பயிரை விவசாயிகள் காப்பாற்றி வந்தனர். பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

ஆனால், காவிரியில் வினாடிக்கு 7000 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் அப்பகுதியில் பயிர்கள் வாடத் தொடங்கி உள்ளன. பல இடங்களில் விவசாயிகள் சரக்குந்துகளில் தண்ணீரை வாங்கிச் சென்று வயல்களில் பாய்ச்சினாலும் கூட அது போதுமானதாக இல்லை. மேலும் அனைவராலும் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சுவது என்பது சாத்தியமானதும் அல்ல. மேட்டூர் அணையில் இப்போது உள்ள தண்ணீரின் அளவு போதுமானதல்ல என்றாலும் கூட, அதை சரியாக மேலாண்மை செய்வதன் மூலம் ஜனவரி வரை காவிரியில் தண்ணீர் வழங்க முடியும். அது தான் இப்போதைய நிலையில் சிறந்த வழியாகும்.

மாறாக விவசாயிகளின் வலியை உணராத அரசு காவிரியில் மிகக்குறைந்த அளவே தண்ணீரைத் திறந்து விடுவதால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 12 போகம் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒருமுறை கூட குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. சம்பா சாகுபடியும் மூன்று முறை மட்டுமே செய்யப்பட்டது. நான்காவது முறையாக நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்து விடலாம் என்று நினைத்த விவசாயிகள் இப்போது நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாதோ என்ற அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயுள்ளனர்.

கர்நாடக அணைகளில் நேற்றைய நிலவரப்படி 43 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் உள்ளது. கர்நாடகத்தில் தண்ணீரின் தேவை குறைந்திருப்பதால் அங்கிருந்து 20 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீரைப் பெறுவதன் மூலம் சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியும். எனவே, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை உடனடியாக வினாடிக்கு 12,000 கன அடியாக உயத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கர்நாடகத்திடமிருந்து காவிரியில் உரிய அளவு தண்ணீரைப் பெற்று காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →