தமிழ்நாடு

விதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைக்காமல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சிஎம்டிஏ: உயர்நீதிமன்றம் கண்டனம்

DIN

சென்னை எஸ்பிளனேடு பகுதியில் உள்ள அங்கப்ப நாயக்கன் தெருவில் இருக்கும் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்க முடியாமல், சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ. உறுப்பினர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு விவரம்: விதிகளை மீறி, ஏ.ஆர்.சுபத் கான், எஸ்.கே.ஹதீஜா உம்மாள் ஆகியோர் கட்டடம் கட்டியிருந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வீட்டின் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும், விதிமீறல் பகுதியை மனுதாரர் சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மீண்டும் அந்த வீட்டுக்கு சீல் வைக்கலாம் என, கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. பின்னர், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அந்தக் கட்டடத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது, விதிமீறல் பகுதி சரி செய்யப்படவில்லை. இருப்பினும்
போதிய கால அவகாசம், கட்டட உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் விதிமீறல் பகுதியை சரி செய்யவில்லை.
பின்னர் காவல்துறை உதவியுடன், அந்த கட்டடத்துக்கு சீல் வைக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி சென்றனர். ஆனால், கட்டடத்துக்கு சீல் வைக்க விடாமல் உரிமையாளர்கள் தடுத்து விட்டனர்.
ஆகையால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விடாத சுபத்கான், ஹதீஜா உம்மாள் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: விதிமீறல் கட்டடத்துக்கு சீல் வைக்க முடியாத சிஎம்டிஏ. அதிகாரிகள், அந்த பணியை மேற்கொள்ள அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருப்பது வேதனைக்குரியது.
இவற்றை பார்க்கும்போது, சட்ட ரீதியான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில்தான் அரசு எந்திரங்கள் உள்ளன என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆகையால், காவல் துறை உதவியுடன், அந்த வீட்டிற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சென்று விரைவாக சீல் வைக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள், தங்களது பணிகளை செய்வதற்கு இதுபோல வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் உதவியை நாடி, நீதிமன்ற நேரத்தையும் வீணடிக்கக் கூடாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT