தமிழ்நாடு

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

DIN

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) கோவைக்கு வருவதையொட்டி, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி- சிவன் சிலை திறப்பு விழா மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.25 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கிருந்து விழா நடைபெறும் ஈஷா யோக மையத்துக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் விழாவில் ஆதியோகியின் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். அதன் பிறகு, இரவு 7.55 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் வரும் அவர், இரவு 9 மணிக்குத் தனி விமானம் மூலம் புது தில்லி செல்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மாநில முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி (தமிழகம்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரம்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), தேவேந்திர பட்னவீஸ் (மகாராஷ்டிரம்), சிவராஜ் சிங் சௌகான் (மத்தியப் பிரதேசம்), புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சாலை வழியாக நிகழ்ச்சி நடைபெறும் ஈஷா மையத்துக்குச் செல்கின்றனர். பிரதமர் வரும் நேரத்தில் வானிலை மோசமடைந்தால், சாலை வழியாக விழா நடைபெறும் இடத்துக்குச் செல்லவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக, கோவை- பேரூர் சாலையில் குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்களின் போக்குவரத்து ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும், ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் செலவ்தற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி, கோவை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT