நாங்கள்தான் உண்மையான அதிமுக: பன்னீர்செல்வம் அறைகூவல்
நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தனது இல்லத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார்.
சென்னை: நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தனது இல்லத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்பொழுது ஜெயலலிதாவின் படத்திற்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
நாங்கள்தான் உண்மையான அதிமுக. கட்சியின் சின்னமான இரட்டை இலையை விரைவில் மீட்டெடுப்போம். தற்போது எங்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஆனால் இந்த இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் உள்ளனர். இந்த உண்மையானது வரக்கூடிய தேர்தலில் அனைவருக்கும் தெரிய வரும்.
Advertisement
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாக கட்சியில் சேர்க்கப்பட்டு பெரிய பதவிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் கட்சிக்கு என்றும் ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலலாளர். சசிகலாவின் நியமனமே செல்லாது என்னும் போது அவரால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் அனைத்துமே செல்லாது.
நிலைமை இப்படியிருக்க எங்களை மீண்டும் கட்சியில் இணையலாம் என்று தினகரன் அழைப்பு விடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.