தமிழ்நாடு

69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பெருந்திட்டம்

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மகிழம்பூ மரக்கன்றை நட்டு, புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கினார்.
தொடர் திட்டம்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், ரூ.65 கோடியே 85 லட்சம் மதிப்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் பணியானது, பிப்ரவரியில் தொடங்கப்பட்டு டிசம்பரில் முடிக்கப்படும். இந்த மரக்கன்றுகள் வனப் பகுதிகளிலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலக வளாகங்கள், சாலையோரங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் நடப்பட்டு பராமரித்துப் பாதுகாக்கப்படும்.
என்னென்ன மரங்கள்: தமிழ்நாடு பருவநிலை மற்றும் மண் வளத்துக்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும்.
வர்தா புயல் காரணமாக, சென்னை மற்றும் அதை அடுத்துள்ள மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டும், பாதிப்புக்கும் உள்ளாகின. எனவே, அரசு நிலங்களில் மரங்களை நடுவதற்கும், தனிநபர்கள், தனியார் நிறுவனங்களில் மரம் நடுவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கும், இந்த மாவட்டங்களில் காப்புக்காடுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்களுக்கு மானிய விலையில் 2 லட்சத்து 62 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.13.42 கோடி செலவிடப்படும்.
வெள்ளிக்கிழமை (பிப். 24) நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, வனம்-சுற்றுச்சூழல் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வரவேற்றுப் பேசினார். சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT