தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்து போட்டி: வைகோ

DIN

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிடுகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கோவையில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, தலைமையில் பொதுக் குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்திற்கு பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலகட்டம் இது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனை முன்னிறுத்தி ஊழலற்ற அரசியலை மதிமுக மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இடைக்கால அரசு உருவாகியுள்ளது. இதற்காக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வரலாறு காணாத அசம்பாவித சம்பவங்களை திமுக உறுப்பினர்கள் அரங்கேற்றினர்.
 ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக கோருவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் மூன்று முறை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குரல் வாக்கெடுப்பாக தான் நடைபெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது திமுகவின் சதித் திட்டம் ஆகும்.
நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க மாட்டோம் என தமிழக அரசும் கூறியுள்ளது. எனவே தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நுழைய விடமாட்டோம்.
 உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
பூரண மதுவிலக்கு கொண்டு கட்சிக்கு அப்பாற்பட்டு மாணவர்களை ஒன்று திரட்டி மக்கள் இயக்கம் நடத்துவோம் என்றார் வைகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT