முகப்பு
தமிழ்நாடு

பருவம் தவறி பெய்யும் மழை: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

வடகிழக்குப் பருவ காலம் முடிவடைந்த பிறகு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:51 AM
பகிர்:


திருநெல்வேலி: வடகிழக்குப் பருவ காலம் முடிவடைந்த பிறகு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

வடகிழக்குப் பருவ மழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்வது வழக்கம். 2016 இல் பருவ மழை தாமதமாக அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கிய போதிலும் தொடர்ந்து பெய்யவில்லை.

வழக்கமான மழை அளவை விட 62 சதவீதம் குறைவாக பெய்ததால் தாமிரவருணிப் பாசனத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான நீர்இருப்பும் அணைகளில் இல்லை.

இதனிடையே சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், இவ்விரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவ காலம் முடிவடைந்த நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-11, பாபநாசம் கீழ் அணை-5, சேர்வலாறு அணை-4, மணிமுத்தாறு அணை-1.4, கடனாநதி அணை-2, ராமநதி அணை-5, கருப்பாநதி அணை-15, கன்னடியன் அணைக்கட்டு-3.8.

பிற பகுதியில்...அம்பாசமுத்திரம்-7.4, சேரன்மகாதேவி-4, சங்கரன்கோவில்-2, சிவகிரி-25, ராதாபுரம்-2.2, நான்குனேரி-4, பாளையங்கோட்டை-12, தூத்துக்குடி-9.6, திருச்செந்தூர்-9, கயத்தாறு-4.8, கோவில்பட்டி-2, குலசேகரப்பட்டனம்-13, விளாத்திகுளம்-17.5, வைப்பாறு-24, மணியாச்சி-1, ஓட்டப்பிடாரம்-6, கீழரசடி-2, சாத்தான்குளம்-11, ஸ்ரீவைகுண்டம்-9.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் 5 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையின் நீர்வரத்து 788 கன அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், பாபநாசம் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 977.32 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 53 கனஅடி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைகளுக்கு தலா 10 கனஅடியாக  நீர்வரத்து இருந்தது.

அதிகரிக்கும் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 39 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 68.60 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 39.90 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 54 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 37.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 45.01 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 21.62 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 64.75 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.21 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 13.25 அடியாகவும் உள்ளது.

நீடிக்கும் மழை: பாபநாசம் அணையில் இருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சனிக்கிழமை கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், விக்கிரமசிங்கபுரம், முக்கூடல் உள்பட இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →