தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மீண்டும் புற்றீசலென புறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 1984 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலும் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு முறை அமலில் இருந்தது. பொதுத் தேர்வில் முக்கியப் பாடங்களில் பெறும் மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, கட்-ஆஃப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.
நுழைவுத் தேர்வு முறையால் பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகரித்ததாலும், வசதி குறைவான கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்த நகர்ப்புற மாணவர்களுக்குமான வேறுபாடுகளை நீக்கவும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வியில் சமமான வாய்ப்புகளை உருவாக்கவும் 2006-ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
இதனால் மிகப் பெரும்பாலான நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் மூடப்பட்டும், கணினி பயிற்சி மையங்களாக உருமாறியும் முடிவுக்கு வந்தன. மேலும் சில மையங்களோ சி.பி.எஸ்.இ. வழி மாணவர்கள் மட்டுமே அணுகி வந்த ஐஐடி., ஜே.இ.இ.இ. உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும் மையங்களாகத் தொடர்ந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்திருப்பதால் கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் காளான்களைப் போல் வீதிக்கு வீதி முளைக்கத் தொடங்கிவிட்டன. எந்தப் பயிற்சி மையத்துக்கு நாடு முழுவதிலும் கிளைகள் உள்ளன, எதில் பயின்றவர்கள் அதிகம் வெற்றி பெற்றனர் என்று தேடிப்பிடித்து அவற்றின் வாசலில் பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர்.
அதேநேரம், உடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் அன்றாடம் உண்ணக் கூடிய காய்கறிகள் வரையிலும் வீடுதேடி வந்து வழங்கிவிட்டுச் செல்லும் ஆன்லைன் வர்த்தகத்திலும் பயிற்சி மைய வியாபாரிகள் நுழைந்துவிட்டதால், நீட் பயிற்சியை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பதாகக் கூறி வசூல் தொடங்கியுள்ளது.
தற்போது பல இணையதளங்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி அளிப்பதாக விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்தப் பயிற்சியில் விடியோ வழி பாடம், ஆன்லைன் டியூஷன், தேர்வுக் குறிப்பு, லைவ் சாட் எனப்படும் பயிற்றுநருடனான நேரடி உரையாடல், பயிற்சித் தேர்வு, கடந்த ஆண்டுகளின் கேள்வித் தாள்கள், மாதிரி கேள்வித் தாள்கள், கண்டிப்பாக இடம்பெறும் என்று கருதப்படும் வினா-விடைகள் ஆகியவை அடங்கும். இந்த வகை பயிற்சிக்கு குறைந்தபட்சம் ரூ.9,500 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகள் கூறுகின்றன.
மேலும் சில இணையதளங்களோ 2 ஆண்டு இணையவழி நீட் பயிற்சிக்கு ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கின்றன. இந்த விடியோ வழி, ஆன்லைன் அல்லாத பயிற்சித் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு டேப்லெட் கணினியையும், பயிற்சித் திட்டம் அடங்கிய மெமரி கார்டையும் மாணவருக்கு வழங்கிவிடும்.
மாணவர்கள், அதில் உள்ள 200-க்கும் அதிகமான பாடங்களை படித்துக் கொள்ளலாம். சந்தேகங்களை மட்டும் ஆன்லைன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதாக விதிமுறைகள் நீளுகின்றன.
இவ்வாறு காலத்துக்கு ஏற்ப காசு பார்க்கும் மையங்களில் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா, சரியான பாடத் திட்டம் உள்ளதா என்பதையெல்லாம் யாரும் கருத்தில் கொள்வதில்லை. அதேநேரம், இதுபோன்ற பயிற்சி மையங்களால் தமிழக மாணவர்களால் முதல் 25 இடங்களுக்குள் வரவைத்துவிட முடியும் என்றாலும், இந்த நடைமுறையானது மருத்துவம், பொறியியல் படிப்புகளை கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு மேலும் எட்டாத தூரத்தில் வைத்துவிடும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
மாணவர், பெற்றோரின் மனநிலையைப் புரிந்து கொண்ட பயிற்சி மையங்கள், குறைந்தது ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரையிலுமான கட்டணங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. கோவையில் சில பயிற்சி மையங்கள் 6-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டணம் என்றும் வெளிப்படையாக விளம்பரப்படுத்துகின்றன.
மேலும் சில தனியார் பள்ளிகள் பிரபலமான பயிற்சி மையங்களுடன் சேர்ந்து பள்ளிகளிலேயே பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. பள்ளிப் பாடத் திட்டத்துடன் இணைந்ததாக நீட் பயிற்சி வகுப்பு மாற்றப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகளோ தாங்களாகவே பயிற்சி வகுப்பு நடத்துவதாகக் கூறி மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கூடுதலாக வசூலிக்கின்றன.
கடந்த ஆண்டில் சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் நீட் எழுதிய நிலையில், வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். இனி பொறியியலுக்கும் நீட் அமல்படுத்தப்படுமானால், நாட்டில் பயிற்சி வகுப்பு வர்த்தகம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும்.
பிளஸ் 2 பாடங்களை மாணவர்கள் இனி வெறுமனே தேர்ச்சி பெறும் அளவுக்கு மட்டுமே படித்து விட்டு, பயிற்சி மையங்களே கதியென்று நாடும் நிலை இந்த ஆண்டே உருவாகும். இந்தியக் கல்வியானது இனி பணத்தின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படும் என்ற நிலையானது ஒட்டுமொத்த கல்வி முறையை மாற்றி ஆபத்துக்குத்தான் அழைத்துச் செல்லும் என்கிறார் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வே.ஈஸ்வரன்.
பயிற்சி வகுப்புக் கல்வியால் மாணவர்களுக்கு கற்றல் என்பது மேலும் கசப்பையே தரும் என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
நீட் தேர்வு உறுதி செய்யப்பட்டது முதல் தமிழகத்தில் எங்கு நோக்கினாலும் பயிற்சி மையங்களின் விளம்பரங்களாகவே உள்ளன. இனி பள்ளிகளில் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படுகின்றனவோ இல்லையோ, நீட் வகுப்புக்குப் பயிற்சி கட்டாயம் நடைபெறும். மாணவர்களும் பாடங்களுடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் படிக்க வேண்டும். கசப்பைத் தருவதாக உருவாகும் இந்தக் கல்வி முறையால் கற்றல் என்பது நின்றுபோய் வெறுமனே பயிற்சி மேற்கொள்ளுதலே நிலைக்கும்.
பிற்காலத்தில் யாரோ ஒரு சிலர் எம்.பி.பி.எஸ். பயிலுவதற்காக இந்த வகுப்புகளில் உள்ள எல்லா மாணவர்களும் நீட் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது திட்டமிட்ட வன்முறை. இந்த வரைமுறையற்ற கல்விச் சந்தையால் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால்தான் கல்விக் கட்டணம், சமச்சீர் கல்வி போன்றவற்றை கடுமையாக எதிர்த்த தனியார் பள்ளிகள், நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் விட்டுவிட்டன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.