திமுக கூப்பிட்டால் விஜயபாஸ்கர் போய்விடுவாரா?: அவையில் எழுந்த சிரிப்பலை
எதிர்க்கட்சித் துணைத் தலைவரானதுரைமுருகன் கூப்பிட்டால் (திமுகவுக்கு), வருவேன் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவரானதுரைமுருகன் கூப்பிட்டால் (திமுகவுக்கு), வருவேன் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் மாசிலாமணி டெங்கு விவகாரம் குறித்துப் பேசினார். அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.
அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குறுக்கிட்டுக் கூறியது:
சித்தர்கள் போல என மருந்துகளை எல்லாம் மறைத்து வைக்கிறீர்கள். எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்புக்கடிக்கான மருந்து எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும். கடந்த முறையும் இந்த விவகாரம் குறித்து அவையில் பேசினேன். அமைச்சர் எல்லா இடங்களிலும் இருப்பதாகக் கூறினார். ஆனால், கடைகளில் கேட்டால் மருந்துகள் இல்லை. இப்போது வாருங்கள். எல்லாக் கடைகளிலும் போய் பார்த்துவிட்டு வருவோம் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: மருந்துகள் எல்லா இடங்களிலும் உள்ளன. பாம்புக்கடிக்கு 5 மாத இருப்பில் 1 லட்சம் மருந்துகள் இருப்பில் உள்ளன. நாய்க்கடிக்கான மருந்து 2 மாத இருப்பில் 1.28 லட்சம் மருந்துகள் உள்ளன. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இப்போது கூப்பிட்டால்கூட வரத் தயாராக இருக்கிறேன்.
பொள்ளாச்சி ஜெயராமன் (பேரவைத் துணைத் தலைவர்): கூப்பிட்டால் போவீர்களா? (திமுகவின் பக்கம் போய்விடுவீர்களா) என்றார்.
இதற்கு, அதிமுக - திமுக உறுப்பினர்கள் அனைவருமே சிரித்துவிட்டனர். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் எழுந்து, மருந்துக் கடைக்குக் கூப்பிட்டால் போவேன் எனக் கூறியதாக விளக்கம் அளித்தார்.