நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்: தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தல்
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகள்
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். மேலும், அவையின் மையப் பகுதிக்குச் சென்று அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான புதன்கிழமை மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் கூடியது. அப்போது, விவசாயிகளின் பிரச்னைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின.
முக்கிய விவகாரங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரம் தொடங்கியதும், தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து 'நீட்' தேர்வு விவகாரத்தை ஒருமித்த குரலாக எழுப்பினர். 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி பேசினர்.
அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ்: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு, அது தொடர்பான கோப்பு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை. தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 98 சதவீதம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் விருப்பமாகும். மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதியை மாநில அரசுதான் செய்து கொடுத்துள்ளது.
மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்: நீட் தேர்வில் தென் மாநில மாணவர்களுக்கு கடினமான கேள்விகளும், வட மாநில மாணவர்களுக்கு எளிதான கேள்விகளும் கேட்கப்பட்டன. இது பாரபட்சமான செயலாகும்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்: நீட் தேர்வில் கேட்கப்பட்ட பாதிக் கேள்விகள் தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை. இதுதான் கூட்டுறவு கூட்டாட்சி நடைமுறையா? மாநில அரசு இது தொடர்பாக சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்காமல் இருப்பது ஏன்?.
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் உறுப்பினர் அனந்த் சர்மா: நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு இயற்றியுள்ள சட்டம் தொடர்பாக மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், ஏ.கே. செல்வராஜ், டி.ரத்தினவேல், விஜயக்குமார், கே.ஆர். அர்ஜுனன், விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோரும், திமுக தரப்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் அவையின் மையப் பகுதிக்குச் சென்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி கோஷமிட்டனர்.
அமைச்சர் ஜாவடேகர் பதில்
நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதில் அளித்தார். அவர் கூறுகையில், 'இந்த விஷயத்தில் மத்திய அரசு ஒவ்வொரு அமைப்பின் கோரிக்கையையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அனைவரிடமும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது. நாட்டில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றமும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன. கடந்த ஆண்டு, இத்தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு ஏற்கெனவே நடத்தப்பட்டு விட்டது' என்றார்
ராஜ்நாத்திடம் அதிமுக எம்பிக்கள் நேரில் முறையீடு
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) விவகாரத்தில் தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் புதன்கிழமை பிற்பகலில் நேரில் சந்தித்து முறையிட்டனர்.
தில்லி அக்பர் சாலையில் ராஜ்நாத்தின் இல்லத்தில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், எம்.பி.,க்கள் சி.கோபாலகிருஷ்ணன், ஏ. அன்வர்ராஜா, ஏ. விஜயக்குமார், விஜிலா சத்யானந்த், பி.நாகராஜன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், அவரை நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியதாவது: தமிழக மாணவர்கள் நலன் கருதி 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழகஅரசு எடுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இந்த விவகாரம் குறித்து எடுத்துரைத்தோம். அவரும் ஆவன செய்வதாகக் கூறியிருக்கிறார். இது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிந்து, தேர்வானோர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதால், நீதியை நாடி மத்திய அரசை அணுகியுள்ளோம். 'நீட்' தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக மத்திய அரசு பெற்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் மூலம் நடைபெற்ற தேர்வை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட போதிலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நீட் தேர்வுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியுமென நம்புகிறோம் என்றார்அவர்.